இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான்மீதான ரிம2 மில்லியன் ஊழல் வழக்கு தொடங்கியது. தெங்கு அட்னான் ஒரு மேம்பாட்டாளரிடமிருந்து இடைத் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கினார் என்று குற்றஞ்சாட்டுள்ளது.
அட்னான்மீது குற்றப் பத்திரிகை வாசித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜூலியா இப்ராகிம், முன்னாள் அமைச்சர், அசட் காயாமாஸ் நிறுவனத்தின் இயக்குனரான சாய் கின் கொங்கிடம் ரிம5 மில்லியனிலிருந்து ரிம6 மில்லியன்வரை கொடுக்குமாறு கேட்டிருக்கிறார் என்று கூறினார்.
“சாய் அதற்காக (இடைத் தேர்தலுக்காக) ரிம2 மில்லியனுக்குக் காசோலை கொடுத்தார். அப்பணம் டாட்மன்சோரி ஹொல்டிங்ஸ் சென். பெர்ஹாட் கணக்கில் சேர்க்கப்பட்டது”, என்று கூறிய அவர் டாட்மன்சோரி நிறுவனத்தில் தெங்கு அட்னான் ஒரு பங்குதாரர் என்றும் குறிப்பிட்டார்.
சாய் ரிம2 மில்லியனுக்கான காசோலையை தெங்கு அட்னானிடம் அவருடைய அலுவலகத்தில் கொடுத்தார் என்றும் அதை அரசுத் தரப்பு சான்றுகளுடன் நிரூபிக்கும் என்றும் ஜூலியா சொன்னார்.