புக்கிட் அமான் சட்டப் பிரிவின் முன்னாள் தலைவர் மொக்தார் முகம்மட் நூர் காணாமல்போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மற்றும் பெர்லிஸ் சமூக ஆரவலர் அம்ரி சே மாட் இருவரையும் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார்.
அவர் விலகியதை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சு அவருக்குப் பதில் இன்னொருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறிற்று.
மொக்தாரை நியமித்தபோதே அதற்கு கோ குடும்பத்தார் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காணாமல்போனவர்கள்மீது விசாரணை நடத்திய சுஹாகாம், 18 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 3-இல் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கை கோவு- அம்ரி காணமல்போன விவகாரத்தில் போலீஸ் சிறப்புப் பிரிவுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறிற்று. அதனைத் தொடர்ந்து அமைச்சரவை சுஹாகாம் கண்டுபிடிப்பை மேலும் ஆராய ஒரு பணிக்குழு அமைக்க ஒப்புக்கொண்டது.
கோ,64, 2017 பிப்ரவரி 13-இல், கிளானா ஜெயாவில் காரோட்டிச் சென்றபோது முகமூடி அணிந்த நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். பெர்லிஸ் ஹோப் நலன்பேணும் சங்கத்தின் கூட்டு-நிறுவனரான அம்ரி,44, 2016, நவம்பர் 24-இல் காணாமல் போனார்.