காற்றில் நச்சுத்தன்மை இல்லை, அப்படியானால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன?

பாசிர் கூடாங்கில் பல சோதனைகள் செய்தாயிற்று காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்திருப்பதாக தெரியவில்லை. இருந்தும் மாணவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுகின்றன. இது எதனால் என்று புரியாமல் ஜோகூர் அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.

திங்கள்கிழமை 85 பள்ளிகளில் மேற்கொண்ட சோதனைகளில் காற்றில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை என மாநில சுகாதார, கலாச்சார, மரபுடைமைக் குழுத் தலைவர் முகம்மட் குஸ்ஸான் அபு பக்கார் கூறினார்.

“சில பள்ளிகள் காற்றில் நச்சுக்கலவை அறவே இல்லை ஆனாலும் மாணவர்களிடம் நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.

“சிறுநீர், இரத்த பரிசோதனைகூட செய்து பார்த்தாயிற்று. பலனில்லை.

“இருந்தாலும் 85 பள்ளிகளிலும் சோதனைகள் தொடரும்”, என்று கூறியவர் மாணவர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.