மலேசிய இளைஞர் மன்றம்: இளைஞர்களின் வயது வரம்பு 30 என்றில்லாமல் 35 என்றிருப்பது நன்றாக இருக்கும்

மலேசிய இளைஞர் மன்றம்(எம்பிஎம்), 30 வயதுக்கு உள்பட்டவர்களே இளைஞர்கள் என்று வரையறுக்கும் அரசாங்கத்தின் முயற்சியை ஏற்கவில்லை. 35 என்பது ஏற்கத்தக்க வயது என்று அது கூறியது.

எம்பிஎம் தலைவர் ஜுபிட்ரி ஜொஹா, இளைஞர்களின் உச்சபட்ச வயதை 35 என்று வரையறுக்கலாம் என எம்பிஎம் கூறி வந்ததை முன்பு இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மானும் ஒப்புக்கொண்டார் என்று கூறினார்.

அமைச்சரவையில் ஆக இளையவரான சைட் சித்திக் அண்மையில், 2007-ஆம் ஆண்டுக்கான இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டுச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரும் சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அத்திருத்தம் இளைஞர்கள் என்றால் 30வயதுக் குறைவானவர்கள் என்று வரையறுக்க முனைகிறது.

இப்போது அச்சட்டத்தின் பிரிவு 2, 15க்கும் 40-க்கும் இடைப்பட்ட வயதினர்தான் இளைஞர்கள் என வரையறுக்கிறது.

“இளைஞர்கள் என்பதை 15-க்கும் 35-வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என வரையறுப்பது பொருத்தமாக இருக்கும் என்று எம்பிஎம் பரிந்துரைக்க அமைச்சரும் 2019 தேசிய இளைஞர் தின நிகழ்வில் கலந்துகொண்டபோது அதை ஏற்றுக்கொண்டார்”, என ஜுபிட்ரி ஓர் அறிக்கையில் கூறினார்.

வயது மாற்றம் அமலுக்கு வரும்போது அதனால் “பாதிக்கப்படும் தரப்பு” என்பதால் எம்பிஎம்-உடன் அமைச்சர் ஆலோசனை கலக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாரவர்.