அம்னோ கம்முனிஸ்டுகளுடன் போரிட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை- முன்னாள் ஆயுதப்படையினர்

நஜிப் அப்துல் ரசாக் அவசரகாலத்தின்போது அம்னோ மூத்தோர்கள் கம்முனிஸ்டுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்கள் என்று கூறியிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆயுதப் படைகள், போலீஸ் படை முன்னாள் பணியாளர்கள் சங்கமான தேசிய பெட்ரியோட் சங்கம் வலியுறுத்தியது.

அம்னோ குழுக்களை அமைத்து கம்முனிஸ்டு ஊடுருவலை எதிர்த்துப் போராடியதாக எந்த வரலாற்றுக் குறிப்பும் கிடையாது என பெட்ரியோட் தலைவர் அர்ஷாட் ஆயுப் கூறினார்.

“கம்முனிஸ்டு ஊடுருவலை எதிர்த்து மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர், சீக்கியர், ஓராங் அஸ்லிகள், இபான், டயாக், கடாசான், சட்டைக்காரர்கள் என எல்லா இனத்தவரும் போராடினர் என்பதே வரலாற்று உண்மை.

“நஜிப் கம்முனிச மருட்டலை முறியடிப்பதில் அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய ஆயுதப் படைகள் போன்றோரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவர்களில் பலர் உயிரிழந்தனர் அல்லது ஊனமுற்றனர்”, என அர்ஷாட் ஓர் அறிக்கையில் கூறினார்.