மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின்

அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின், டிஏபி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கைக் கொண்டது எனத் தாம் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டை தற்காத்துப் பேசியிருக்கிறார்.

அந்தக் கட்சி இனவாதத் தன்மையைக் கொண்டது  எனக் குறிப்பிட்ட அவர், தம்மை குறை கூறுகின்றவர்கள் “100 மடங்கு கூடுதலான இனவாதிகள்” என வருணித்து பதிலடி கொடுத்தார்.

தாம் கூறிய எதுவும் வரலாற்று உண்மைகளிலிருந்து மாறுபட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், கட்சியின் போராட்டம் மீது மலாய்க்காரர்களிடையே புதிய விழிப்புணர்வை ஒருங்கிணைக்க அவை உதவும் என்றார்.

“தீவிர இனவாதியாக உள்ள ஒருவரே அது இனவாதம் என சிந்திக்க முடியும். ஏதாவது ஒரு தரப்பு தங்கள் சொந்த இனம் பற்றிப் பேசினால் அது இனவாதம் என அவர் சொல்வார்.”

“அவர்கள் எங்களைக் காட்டிலும் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்பதை அவர்கள் உணருவது இல்லை,” என அம்னோ பொதுப் பேரவையில் நிருபர்கள் சந்திப்பில் முஹைடின் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த  முஹைடின், மலேசியாவை குடியரசாக்க முயலும் இஸ்லாம் எதிர்ப்பு, மலாய் எதிர்ப்புக் கட்சி எனக் குற்றம் சாட்டினார்.

இனம், சமயம், நாடு ஆகியவற்றுக்கான கட்சியின் புனிதப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த மூன்று பிரிவுகளின் உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அடுத்த நாள் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், முஹைடின் உரை, “எல்லாப் பொய்களுக்கும் பொய்மைகளுக்கும் இனவாதத்திற்கும் அன்னை” எனத் தாக்கிப் பேசினார்.

இன்றைய நிருபர்கள் சந்திப்பில், அம்னோ இனவாதக் கட்சியல்ல என்றும் மற்ற பிஎன் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது என்றும் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் கொள்கை உரையையும் எடுத்துக் காட்டினார்.   

“முதலாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ சொந்தமாக அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இருந்தது. ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டோம் என்பதை வரலாறு காட்டுகிறது.”

அதற்கு மாறாக தனது கூட்டுக் கட்சிகள் இணைந்து செயல்பட முடியும் என்பதை எதிர்த்தரப்பு மெய்பிக்கவில்லை என்றும் நஜிப் குறிப்பிட்டிருந்தார்.

TAGS: