சர்ச்சைக்குரிய சமயப் பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாய்க் அடுத்த மாதம் கிளந்தானில் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மட் பாட்ஸ்லி ஹசான் தெரிவித்தார்.
ஜாகிருக்கும் அவரைத் திருப்பி அனுப்ப மறுக்கும் மகாதிருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 7-இலிருந்து ஆகஸ்ட் 10வரைக்குமான அந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் தேடப்படும் நபரான ஜாகிருக்கு மலேசியா நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கியுள்ளது. பண மோசடி விவகாரங்களுக்காக இந்திய அதிகாரிகள் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அவற்றைப் பொய்யான குற்றசாட்டுகள் என்கிறார்.
ஜாகிர் ஆகஸ்ட் 8-இல், கோட்டா டாருல்நயிமில் அரசுப் பணியாளர்களிடையே உரையாற்றுவார் என பாட்ஸ்லி தெரிவித்ததாக ஹராகா ஆன்லைன் கூறியது.
அன்றிரவு அவர் டேவான் புசார் கொம்ப்ளெக்ஸ் பாலாய் இஸ்லாமில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களிடையே கலந்துரையாடுவார்.
மறுநாள், ஜாகிர், குபாங் கிரியானில் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையுரை ஆற்றுவார்.
ஆகஸ்ட் 9 இரவில், சுல்தான் முகம்மட் IV அரங்கில் மாபெரும் பொதுக் கூட்டமொன்றில் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி உரையாற்றுவார்.