முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரிஸா அஸிஸ் மீது 1எம்டிபி-இலிருந்து கள்ளத்தனமாகப் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்கும் முயற்சியில் – பணச்சலவை செய்யும் முயற்சியில் – ஈடுபட்டதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
செஷன்ஸ் நீதிபதி ரோசினா ஆயோப் முன்னிலையில் அவர்மீது வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் 2011க்கும் 2012க்குமிடையில் அவர் யுஎஸ்$248 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்பட்டது.
ஐந்து தவணைகளில் அப்பணம் அவருக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் கணக்கில் போடப்பட்டதாம்.
ரிஸா ‘ரெட் கிரெனைட் பிக்சர்ஸ்’ என்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் இணை-நிறுவனர் ஆவார்.இந்நிறுவனம் ‘த வுல்ஃப் அஃப் வால் ஸ்திரிட்’ என்ற படத்தைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.