பி.எஸ்.எம். : ஹாடி, டாக்டர் எம் கூற்றுப்படி, நல்ல யோசனைகள் அனைத்தும் சோசலிஸ்டுகளுடையது

சொத்து அறிவிப்பு என்பது சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுடைய யோசனை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதைத் தொடர்ந்து, அதேபோன்று கூறப்பட்ட வேறு சில சம்பவங்கள் பற்றி மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன் கருத்துரைத்துள்ளார்.

அவற்றுள், டோல் கட்டணத்தை அகற்றுதல் மற்றும் வீட்டு விலையைக் குறைத்தல் போன்ற யோசனைகளும் அடங்கும் என அருட்செல்வன் விளக்கப்படுத்தினார்.

“பார்க்கப்போனால், நல்ல யோசனைகள் அனைத்தும் சோசலிஸ்டுகளுடையது போல. சொத்து அறிவிப்பு என்பது, சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் யோசனை என்பதால் அதனை எதிர்ப்பதாக பாஸ் தலைவர் ஹாடி கூறியுள்ளார்.

“இதற்கு முன்னர், டோல் கட்டணத்தை அகற்ற கோரியபோது, இந்த யோசனை சோசலிச சிந்தனை கொண்ட பி.எச். தலைவர்களிடம் வந்தது என பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியிருந்தார். வீட்டு விலையைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டபோது, அது சோசலிச சிந்தனை என ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் கூறினர்.

“இதன் அடிப்படையில் பார்க்கும் போது, நல்ல யோசனைகள் எல்லாமே சோசலிஸ்டுகளிடம் இருந்துதான் வருகின்றன போலு,” என அருட்செல்வன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

“சோசலிஸ்ட்டுகள் செல்வத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள், இது தாராளவாதமயமாக பரிணாமங்காணும் சோசலிச நாடுகளின் சோசலித் தலைவர்கள் பணக்காரர்களாகவே இருக்கின்றனர்,” என்று அவர் மாராங், ருசிலாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளைப் பொதுவில் அறிவிக்க வேண்டுமென்ற தீர்மானத்திற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.