ஜொகூர் இந்தியர்களின் நல்வாழ்வில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது, ஆட்சிக்குழு உறுப்பினர் திட்டவட்டம்

ஜொகூர் மாநிலத்தில், இந்திய சமூகம் பாதுகாக்கப்படவில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கூற்றை, தானும் மாநில அரசும் கடுமையாக மறுப்பதாக ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் சுப்பையா கூறியுள்ளார்.

“இந்திய சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டில், மாநில அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது, குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் பிரச்சினைகளில் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது,” என அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

பண்டார் ஶ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பிரச்சனை

2019, மே 27-ல், கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில், பண்டார் ஶ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள கழிவுநீர் அமைப்பு தொடர்பான பணிகள் விரைவில் நிறைவடைந்து, டிசம்பர் 2019-ல் பள்ளி இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

“ஒரு பள்ளி, பயன்பாட்டிற்குச் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகள் எவ்விதத் தடங்களும் இன்றி நடைபெற, அதன் அடிப்படை வசதிகள் அனைத்தையும் கல்வியமைச்சு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

“அதன் அடிப்படையில், நான் மாநிலக் கல்வி இலாகாவுடன் இணைந்து, அதனைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்,” என இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நியோர் தோட்டத் தமிழ்பள்ளி கட்டுமானம்

கடந்தாண்டு அக்டோபரில், கல்வியமைச்சு RM 500,000-ஐ நியோர் தமிழ்ப்பள்ளியின் கட்டுமான பராமரிப்புக்காக வழங்கியதாக இராகிருஷ்ணன் கூறினார்.

“இது தமிழ்ப்பள்ளிகள் மீது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது. பள்ளி கட்டுமான நிறைவு சான்றிதழ் (சிசிசி) இவ்வாண்டு செப்டம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சான்றிதழ் விரைவில் கிடைக்க, நான் மாநில செயலாளருடன் கலந்துபேசி வருகிறேன்,” என்றார் அவர்.

சீனாய் வட்டாரத்தில் புதியத் தமிழ்ப்பள்ளி

கடந்தாண்டு பிப்ரவரி 12-ல், சீனாய் ஏர்போர்ட் சிட்டியில் ஒரு தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை கூலாய் மாவட்ட கல்வி இலாகா நிராகரித்துள்ளது என இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“அவ்வட்டாரத்தில் தமிழ்ப்பள்ளியைவிட, தேசியப் பள்ளிக்கான அவசியம் அதிகம் உள்ளதாக மாவட்டக் கல்வி இலாகா கருதுகிறது. தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்புக்காக அடையாளம் காணப்பட்ட நிலமும், தேசியப் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்.

“நான் கடந்த மே மாதம் 6-ம் தேதி, சீனாய் சட்டமன்ற உறுப்பினருடன் கூலாய் மாவட்ட கல்வி இலாகாவுடன் சந்திப்பு நடத்திவிட்டேன். தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்புக்காக வேறு ஒரு இடத்தை தேடிபிடிக்க வேண்டும். இதற்குச் சட்டமன்ற உறுப்பினர் உதவி செய்ய தயாராக இருக்கிறார்,” என்றார் அவர்.

செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடமாற்றம்

கடந்த 20 ஆண்டுகளாக, குறைந்த மாணவர்கள் பள்ளியாக (எஸ்.கே.எம்.) செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வகைபடுத்தப்பட்டுள்ளது. எனவே, அப்பள்ளியை இடமாற்றம் செய்ய, பள்ளி நிர்வாகத்துடன் பேசி வருவதாக இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“இப்பிரச்சனை கல்வியமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மாநில அரசு இப்பள்ளியை இடமாற்றம் செய்ய சில இடங்களை அடையாளங்கண்டுள்ளது. கெம்பாஸ் வட்டாரம், தாமான் யூனிவர்சிட்டி, சீனாய் போன்ற இடங்கள் இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன,” என அவர் மேலும் கூறியுள்ளார்.

துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு பணியில் தாமதம்

புதிய அரசாங்கம் அமைவதற்கு முன்னதாக, பிஎன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பள்ளி நிர்மாணிப்பு குத்தகையாளர், மெத்தனமாக நடந்துகொண்டதால் பள்ளி நிர்மாணிப்பு பணிகள் இதுவரை நிறைவடையாமல் இருப்பதாக இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“குத்தகையாளருக்கு எதிராக, மே 8 மற்றும் 22-ம் தேதிகளில், இரண்டு எச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சின் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துபேசிய பின்னர், அந்தக் குத்தகையாளருக்குக் குத்தகை நீக்க அறிவிப்பு கடிதம் வழங்கப்படும்,” என அவர் சொன்னார்.

“இப்பள்ளிகள் மட்டுமின்றி, ஓயில் பால்ம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சிசிசி, இவ்வாண்டு டிசம்பரிலும், கோத்த திங்கி, தாஜோல் தமிழ்ப்பள்ளி பணிகள் ஆகஸ்டிலும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் மீது, நான் மட்டுமின்றி, கல்வி இலாகா மற்றும் கல்வியமைச்சு எல்லாமும் அக்கறை செலுத்தி வருகிறது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

தஞ்சோங் லங்சாட், இந்து ஈமக் கிரியை இடம்

இப்பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாக அவர் சொன்னார்.

“பழைய அரசாங்கம் அடையாளங்கண்ட இடம் நில அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதால், அங்கு ஈமக் கிரியை இடம் நிர்மாணிக்க முடியாமல் போனது. இது பிஎன் அரசாங்கத்தின் தோல்வி.

“நில அலுவலகம், புதிய இடத்தைப் பாசீர் கூடாங், தஞ்சோங் லங்சாட், சாராங் புவாயா அருகில் முன்மொழிந்துள்ளது. இதுபற்றி மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் பேசி, முடிவெடுக்கப்படும்,” என அவர் கூறியுள்ளார்.

இந்தியர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடுகள்

ஜொகூர் இந்திய சமூகத்திற்கு, மாநில அரசு RM3 மில்லியனை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி பணியாற்றும் சங்கங்களுக்கு இந்நிதியை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, இந்தியர்களின் சமூகநலம், சிறு வணிக உபகரணங்கள் மற்றும் கடன் உதவிகள் வழங்க இந்நிதி பயன்படுத்தப்படும்.

“என் தலைமையில், இந்நிதியைப் பராமரிக்க ஒரு குழு நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைத் தகுதியுள்ளவர்களுக்கு, கூடிய விரைவில் விநியோகிக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது,” என இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.