சுகாதார அமைச்சு நாட்டில் டிங்கி நோய் கண்டவர் எண்ணிக்கை பெருகி வருவதால் அந்நோயைக் கட்டுப்படுத்த Wolbachia பெக்டிரியாக்களைக் கொண்ட ஏடிஸ் வகை கொசுக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
2017, மார்ச் தொடங்கி சிலாங்கூரில் ஏழு இடங்களில் அந்த வகை கொசுக்களைக் கொண்டு சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டு அவை வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து இம்முடிவுக்கு வந்ததாக அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹமட் கூறினார். சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்குக் குறைந்ததாம்.
டிங்கிக்கெதிராக கொசுக்களைக் கொண்டு போராடும் முறை பயன்படுத்தப்பட்டால் அப்படிப்பட்ட முறையைப் பின்பற்றும் உலகின் இரண்டாவது நாடாக மலேசியா விளங்கும். ஏற்கனவே, ஆஸ்திரேலியா இம்முறையைக் கடைப்பிடித்து வருகிறது.
இம்முறையைப் பயன்படுத்துவதால் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது குறையும் என்று சுல்கிப்ளி கூறினார். அமைச்சர் இன்று கோலாலும்பூர், புக்கிட் ஜாலில் ஸ்ரீ ரக்யாட் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் வொல்பாச்சியா பெக்டீரியாக்களைக் கொண்ட கொசு முட்டைகளை விடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.