நசிர் ஹஷிம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிஎஸ்எம் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்

பார்டி சோசியலிஸ் மலேசியா(பிஎஸ்எம்) தலைவர் டாக்டர் முகம்மட் நசிர் ஹஷிம் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் இருந்து வந்துள்ளார்.

நசிர், அவரின் உதவியாளர் எம்.சரஸ்வதியுடன் வரும் வெள்ளிக்கிழமை பதவியிலிருந்து விலகுவார் என பிஎஸ்எம் மத்திய செயல் குழு உறுப்பினர் எஸ்.அருள்செல்வன் கூறினார்.

அவர்கள் விட்டுச் செல்லும் பதவிகளுக்குப் புதிதாக வரப் போகிறவர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

தலைவர், துணைத் தலைவர், தலைமைச் செயலாளர், பொருளாளர் ஆகிய நான்கு பதவிகளை வகிப்போர் ஐந்து தவணைகளுக்கு அதாவது 10 ஆண்டுகள் மட்டுமே அப்பதவிகளில் இருக்கலாம் என்று மத்திய செயல்குழு 2007-இல் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஏற்ப அவர்கள் பதவி விலகுவது அவசியமாகிறது என்று அருள்செல்வன் கூறினார்.

நசிரின் இடத்தை நிரப்புவது “எளிதல்ல” என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். நசிர், பிஎஸ்எம்-மை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய பத்தாண்டுக் காலம் போராடினார்.

2008-இல் பிஎஸ்எம் அரசியல் கட்சியாக பதிவானது.

நசிர்தான் கட்சியின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர். 2008-இல் பிகேஆர் கட்சி சார்பில் கோத்தா டமன்சாராவில் அவர் போட்டியிட்டு வென்றார்.

“நசிர் சாமானிய மனிதர் அல்லர். 1987-இல் ஓப்ஸ் லாலாங் நடவடிக்கையில் அவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் பலமுறை கைதானார், சிறையில் இருந்துள்ளார்.

“அவர் ஒரு மேதை, இணைப் பேராசிரியாக இருந்துள்ளார், பல திறமைகளைக் கொண்டவர். அக்குபஞ்சர் செய்வார், ஓவியம் வரைவார், கவிதை எழுதுவார், நாவல், சிறுகதைகள் தீட்டுவார்”, என்று அருள்செல்வன் அறிக்கையில் கூறினார்.

சரஸ்வதியை “பிஎஸ்எம்-மின் புலி” என்றவர் வருணித்தார். கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வந்திருப்பவர் சரஸ்வதி என்றார்.

2011-இல் அவசரகாலச் சட்டத்தின்கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.

அவரும் அப்போதைய சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் மைக்கல் ஜெயகுமாரும் நான்கு கட்சி உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டார்கள். மன்னரை எநிர்த்துப் போராடினார்கள் என்றவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சரஸ்வதி அவரது அயரா உழைப்புக்காக அனைத்துலக அளவில் பல பாராட்டுகளைப் பெற்றிருப்பவர் என்றும் அருள்செல்வன் கூறினார்.