‘உதவிப் பதிவாளர்கள் நியமனம் வாக்காளராவதை எளிதாக்கும்’

கோத்தா மலாக்கா எம்பி கூ போய் தியோங் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை உதவிப் பதிவாளர்களா(ஏஆர்ஓ)க நியமிக்கும் தேர்தல் ஆணைய (இசி) முடிவை வரவேற்றுள்ளார்.

“2011-இல் 5,729 ஏஆர்ஓ-கள் வாக்காளர் பதிவில் இசிக்கு உதவியாக இருந்தார்கள்.

“ஆனால், 2017-இல் 205 ஏஆர்ஓ-கள்தான் இருந்தனர். ஏனென்றால் அப்போதைய இசி ஏஆர்ஓ-களின் பதவிக் காலத்தை நீட்டிக்கவில்லை புதியவர்களையும் நியமிக்கவில்லை, குறிப்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை.

“அதன் விளைவாக, பலர் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அஞ்சல் நிலையங்களுக்கும் இசி அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அதுவும் தங்களின் வேலை நேரத்தில் செல்ல வேண்டியிருந்தது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

2018-இல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 216,705. 2019 முதல் காலாண்டில் 26,136 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய கூ இந்த வேகம் போதாது என்றார்.

“இப்போது சுமார் 4 மில்லியன் பேர் தகுதி இருந்தும் இன்னும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளாதிருக்கிறார்கள். இது தகுதியுள்ள வாக்காளர்களில் 20 விழுக்காடாகும்”, என்றார்.

நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதைக் குறைப்பது பற்றிப் பேசப்படுகிறது. அது அமலுக்கு வருமானால் மேலும் 3.8 மில்லியன் பேர் வாக்காளராகும் தகுதி பெறுவார்கள்.

“இசி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஏஆர்ஓ-களாக நியமிப்பதை வரவேற்கிறேன்”, என்றாரவர்.