பாலியல் தாக்குதல் வழக்கில் பேராக் எக்ஸ்கோ கைது

தன் வீட்டுப் பணிப்பெண்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

இதை உறுதிப்படுத்திய மாநில போலீஸ் தலைவர் ரஸாருடின் உசேன், “சந்தேகத்துக்குரிய அவரை விசாரணைக்கு உதவியாக தடுத்து வைத்திருக்கிறோம்”, என்று தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது..

அவ்வழக்கு தொடர்பில் மேல்விவரம் எதனையும் அவர் வெளியிடவில்லை. பின்னர் அறிக்கை வெளியிடும் என்று மட்டும் கூறினார்.

இதனிடையே கைதான டிஏபி சட்டமன்ற உறுப்பினர் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், குற்றச்சாட்டை மறுத்து தான் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் வீட்டில் பணிபுரியும் இந்தோனேசிய பெண் திங்கள்கிழமை அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்ததாக தெரிகிறது.

11 பேரடங்கிய பேராக் ஆட்சிமன்றத்தில் ஐவர் டிஏபி கட்சியினர். வொங் மெய் இங், ஏ.சிவநேசன், பால் யோங், ஹாவர்ட் லீ, அப்துல் அசிஸ் பாரி ஆகியோரே அந்த ஐவர்.