பேராக் ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் அவரின் வீட்டுப் பணிப்பெண்ணைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதன் தொடர்பில் போலீசார் அவரின் குடும்பத்தினர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதைத் தெரிவித்த பேராக் போலீஸ் தலைவர் ரொஸாருடின் உசேன், புகார்தாரரான 23-வயது இந்தோனேசிய பெண் ஓரு பாதுகாப்பான வீட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஜூலை 6இல் போலீசில் புகார் செய்த அப்பெண், அச்சம்பவம் ஈப்போ, மேருவில் உள்ள எக்ஸ்கோ உறுப்பினரின் வீட்டில் நடந்ததாக புகாரில் கூறியுள்ளாராம்.
“அவர் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அவரை மருத்துவச் சோதனைக்கு அனுப்பினோம்.
“சம்பவம் நடந்ததாகக் குறிப்பிடப்பட்ட வீட்டுக்குச் சென்று ஆதாரங்கள் சேகரிப்பட்டன”, என்றும் அவர் இன்று பிற்பகல் ஓர் அறிக்கையில் கூறினார்.
தொடக்க விசாரணைகளைத் தொடர்ந்து இது ஒரு கற்பழிப்புக் குற்றமாக வகை படுத்தப்பட்டுள்ளது.
டிஏபி கட்சியைச் சேர்ந்த 49-வயதான அந்த எக்ஸ்கோ விசாரணைக்காக நேற்று கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் இப்போது போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, எக்ஸ்கோ வழக்குரைஞர், தன் கட்சிக்காரர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தானாகவே போலீஸ் நிலையம் சென்றதாகவும் தெரிவித்தார்.