ஜோகூர் என்ஜிஓ: அரண்மனை தலையீடு இருந்ததா, ஆதாரம் என்ன?

இளைஞருக்கான வயது வரம்பை நிர்ணயிப்பதில் அரண்மனை தலையீடு இருந்ததாகக் கூறப்படுவதற்கு ஜோகூர் மந்திரி புசார் டாக்டர் ஸஹ்ருடின் ஜமாலும் எக்ஸ்கோ உறுப்பினர் ஷேக் உமர் பாக்ரிப்பும் பதிலளிக்க வேண்டும் என்று அரசுசார்பற்ற அமைப்பான என்ஜிஓ டேவான் மூடா வலியுறுத்தியுள்ளது.

இளைஞர் வயது விவகாரத்தில் ஜோகூர் அரசு இரண்டு தடவை பல்டி அடித்ததைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் ஜோகூர் அரண்மனை அதில் தலையிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.

அரண்மனை தலையீடு இருக்கிறது என்று அமைச்சர் கூறுவது ஒரு கடுமையான குற்றஞ்சாட்டு என டேவான் மூடா ஒருங்கிணைப்பாளர் அஹமட் சொலேஹின் அப்ட் கனி கூறினார்.

“குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளையும் ஊகங்களையும் வாரி இறைக்காதீர்கள். அது மறைமுகமாக ஜோகூர் அரண்மனையைக் களங்கப்படும் செயலாகும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இவ்விவகாரத்தில் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஸஹ்ருடினும் ஷேக் உமரும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அஹமட் சொலெஹின் கேட்டுக்கொண்டார்.