‘புதிய மலேசியாவில் முற்போக்குப் போராட்டம்’ – பி.எஸ்.எம். கட்சியின் 21-வது தேசிய மாநாடு இன்று தொடங்கியது

எஸ் அருட்செல்வன் | பினாங்குத் தீவின் தென்பகுதியில் நடந்துவரும் கடல் மீட்புத் திட்டத்திற்கு மறுப்புத் தெரிவிக்க ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பினாங்கு மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானும் அவர்களுடன் இணைந்தேன்

நாடாளுமன்றத்தின் முன் கூடியிருந்தபோது, ஒரு மூத்த பத்திரிகையாளரைச் சந்திக்க நேர்ந்தது.

என்னிடம் பேச்சு கொடுத்த அவர், இன்னும் பி.எஸ்.எம். கட்சி மட்டுமே வீட்டு விலைகள், பொது சுகாதாரப் பிரச்சினைகள் என நம் நாட்டு ஏழை மக்களுக்குக் குரல் கொடுப்பதில் முன்னிலை வகிக்கிறது என்று அவர் கூறினார். தனது ஆய்வில், பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.) மாற்றத்திற்காக ஆட்சி நடத்துவதைவிட அல்லது நம் நாட்டில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதைவிட, உள்கட்சி மோதலிலேயே தனது நேரத்தை வீணடிக்கிறது என்றும் அவர் கூறினார்.

அந்த நேரத்தில், தவறுதலாக நாடாளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் வந்த இரண்டு வண்டிகள் ஒன்றின் டிரைவர் அங்குள்ள போலீசாரிடம், “எங்கே யு-டர்ன் செய்யலாம்”, என்று கேட்க, அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர், “நாக் யு-டர்ன், தான்யா பி.எச்.” (யு-டர்ன் செய்ய வேண்டுமா? பி.எச்.-இடம் கேளுங்கள்) என்றார்.

இன்று மாலை, பி.எஸ்.எம். தனது 21-வது தேசிய மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த 21 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் பதிவு இல்லாமலேயே பி.எஸ்.எம். தனது மக்கள் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளது.

இன்று, மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவில், டாக்டர் நாசீர் கட்சியின் தேசியத் தலைவராக, இறுதியாக கொள்கை உரை ஆற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து, இன்றிரவு அமர்வில், ஒவ்வொரு பிஎஸ்எம் கிளைகள் மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள் தலைவரின் கொள்கை உரையைத் தொட்டு, தங்கள் விமர்சனங்களைச் சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டில், இரண்டு முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. ஒன்று, இன்று உலகளவில் பேசப்படும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான பருவநிலை மாற்றம் மற்றும் அதற்குத் தீர்வுகாண பிஎஸ்எம் பரிந்துரைக்கும் அதிரடி நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும். நம் நாட்டில், பாசீர் கூடாங், கோலா கோ, லைனஸ் மற்றும் பினாங்கில் நிலச்சரிவு போன்ற அனைத்து பிரச்சினைகளும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படாதப் பிரச்சினைகளால்தான் பெருகி வருகின்றன. எனவே, இந்தப் பிரச்சினையைப் பிஎஸ்எம் எவ்வாறு பார்க்கிறது? என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? எப்படிப்பட்ட பிரச்சாரங்களைச் செயல்படுத்த வேண்டும்? என்பது குறித்த ஒரு கட்டுரையைச் சமர்ப்பித்து, உறுப்பினர்களுடனான விவாதங்களுக்குப் பிறகு, பிஎஸ்எம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது.

இரண்டாவது ஆவணமும் மிக முக்கியமானதுதான், உலக நிலையிலும் மலேசியாவிலும் வலது ஜனரஞ்சக சக்தியின் தோற்றம் பற்றி பேசப்படவுள்ளது. இதுதொடர்பான கட்டுரைகளை பி.எஸ்.எம். கட்சியின் அனைத்துலகத் தொடர்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ச்சூ சுன் காய்-உம் ‘இக்ராம்’ இயக்கத்தின் ஜாய்ட் கமாருட்டினும் படைக்கவுள்ளனர்.

இன்று, டிராம்ப் போன்ற அரசியல்வாதிகள் கொண்டுவந்த, மூத்த ஜனரஞ்சகப் பிரச்சினைகளில், உலக அரசியல் ஒரு பாய்ச்சலைக் காட்டுகிறது. இதுவே, மலேசியாவில் இன மற்றும் மதப் பிரச்சினைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பாதுகாப்பான, நிறைவான உலகை நேசிப்பவர்களுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவிலும் அவ்வகையான அச்சுறுத்தல்கள் கணிசமான அளவில் நடந்தேறி வருவது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, சீஃபீல்ட் கோயில் கலவரம், உஸ்தாஸ் வான் ஜி-இன் தூண்டுதல் வழக்கு, ஐசிஇஆர்டி போன்ற பிற பிரச்சினைகள் இச்சிக்கலை நோக்கியேக் கொண்டு வரப்படும்.

அதன் அடிப்படையிலேயே, மலேசிய சோசலிசக் கட்சியின் 21-வது தேசிய மாநாட்டிற்கு கருப்பொருளாக ‘புதிய மலேசியாவில் முற்போக்குப் போராட்டம்’ எனும் வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக நாம் முழுமூச்சாக போராடினோம், அந்நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோம். பி.எச். புதிய அரசாங்கத்தை அமைத்து, ஓராண்டு காலம் ஆட்சியும் செய்துவிட்டது. இந்த ஓராண்டு காலத்தில், பி.எச். பல திட்டங்களை முன்னெடுத்தபோதிலும், மலாய்க்காரர்கள் மத்தியில் வலுபெற்றிருக்கும் அம்னோ-பாஸ் கூட்டணியின் பலத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்தச் சூழலை கையாள வேண்டியக் கட்டாயத்தினால், பி.எச். தனது திட்டங்கள் பலவற்றில் யு-டெர்ன் செய்தது (திரும்பப் பெற்றுக்கொண்டது) குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், மலாய்க்காரர் அல்லாதவர்கள், ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழிக்கிறது எனக் குறைபட்டுக்கொண்டனர். இந்நிலையில், சுதந்திரத்திற்கு முன்பிருந்து, நம் நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் இன, மத பிரச்சனைகளைக் கையிலெடுத்து விளையாட பி.எச். நிர்பந்திக்கப்பட்டது. பி.எச். அரசாங்கத்தால், வேறு எதனையும் செய்ய முடியவில்லை என்று தெரிகிறது. தாராளமய முதலாளித்துவ அமைப்பு முறை, புத்ராஜெயாவில் ஆட்சி செய்பவர்களால் இன்னமும் உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே, மலேசியர்களுக்குத் தேவையான ஓர் எதிர்க்கட்சியாக பி.எஸ்.எம். தன்னை பார்க்கிறது. இதற்குக் காரணம். பெரும்பான்மை மக்களுக்குத் தேவையான அரசியலை பி.எஸ்.எம். முன்வைக்கிறது, வேலை வாய்ப்பு, வீட்டுரிமை, சுகாதாரம், சுற்றுச்சூழல், கல்வி பாலினம் போன்று, மலேசியர்கள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி பி.எஸ்.எம். பேசுகிறது.

பி.எஸ்.எம். முன்னெடுத்துவரும் அரசியல் முற்போக்கான அரசியல், இது பி.எச். அல்லது பி.என். அரசியல் வழக்கிலிருந்து மிகவும் மாறுபட்டது. சிறுபான்மையினருக்குப் பயனளித்து, பெரும்பான்மை மக்களுக்குப் பாதகமாக அமையும், தாராளமய முதலாளித்துவ அரசியலில் இருந்து மக்களை விடுவிப்பதே, பி.எஸ்.எம். கட்சியின் முகான்மை அரசியல் கொள்கை.

அன்று பொதுத் தேர்தல் மேடையில், பி.எஸ்.எம். தோல்வி கண்டிருந்தாலும், இன்று மக்கள் பி.எஸ்.எம்.-ஐ உணரத் தொடங்கிவிட்டனர், காரணம் அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ஓங்கி ஒலித்த பல குரல்கள், இன்று அரசாங்கம் அமைந்ததும் மௌனித்து போனதை மக்கள் கண்கூடாகப் பார்க்கின்றனர். மேலும், தற்போது எதிர்கட்சியாக வீற்றிருப்பவர்கள் இன, மத பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்துவதையும் மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, பொது மக்கள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தவும் மாற்று அரசியலைக் கொடுக்கவும் இன்று பி.எஸ்.எம். மட்டுமே உள்ளது. தரமான மற்றும் முற்போக்கான ஓர் எதிர்க்கட்சியாக, பி.எஸ்.எம்.-இன் பங்கு நம் நாட்டிற்குத் தற்போது மிகவும் தேவைப்படுகிறது.

பிஎஸ்எம் கட்சியின் உள்கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்து, மலேசியா போன்ற பல இன மக்கள் வாழும் நாட்டுக்குத் தேவையான ஒரு முற்போக்கான மாற்றாக தன்னை முன்னிலைப்படுத்த பிஎஸ்எம் கட்சியால் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இன்று தொடக்கம், 3 நாட்களுக்கு, பிளாஸா மெட்ரோ காஜாங்கில், லாவெண்டர் மண்டபத்தில் பி.எஸ்.எம். கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் பார்வையாளர்கள் 016-4407422 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து பதிந்துகொள்ளலாம்.

 

எஸ் அருட்செல்வன்

பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர்