கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியர் ஒருவர் இறந்து போனதை அடுத்து குடிநுழைவுத் துறையின் வழக்கமான நடைமுறைகள் (SOP) திருத்தப்பட்டுச் சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
லிம் கொக் விங் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி மாணவரான ஓர்ஹியோன்ஸ் இவான்சிஹா தாமஸ் என்ற அந்த நைஜீரியர் முறையான ஆவணங்களை வைத்திருந்தபோதும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தடுப்புக் காவலில் இருந்த அவர் ஐந்தாவது நாள் இறந்து போனார்.
இறப்பைப் பற்றி விவரித்த குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் கைருல் ட்ஸைமீ டாவுட், வழக்கான நடைமுறைகள் மீறப்படவில்லை எனறு கூறியிருந்தாலும் தாமஸ் இறப்பதைத் தவிர்த்திருக்கலாம் என சார்ல்ஸ் கூறினார்.
“சோதனையின்போது தாமஸ் தப்பி ஓட முயன்றதால் அவரிடமுள்ளவை சட்டப்பூர்வமான ஆவணங்கள்தானா என்பதைக் கண்டறிவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார் என கைருல் கூறியிருக்கிறார்.
“அவருடைய ஆவணங்களைச் சரிபார்க்க ஐந்து நாள்கள் தேவைதானா, பல்கலைக்கழகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு போதுமே, எல்லாம் தெளிவாகி இருக்குமே.
“இது குடிநுழைவுத் துறை அதிகாரத்தை மீறி நடந்து கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது”, என்று சார்ல்ஸ் கூறினார்.