ஈராண்டு என்ற காலக்கெடுவெல்லாம் கிடையாது, முக்ரிஸ் சொல்வது உண்மையே – அஸ்மின்

பிரதமர் பதவியை ஈராண்டுகளில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பது என்ற காலக்கெடு எதுவும் கிடையாது என்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறியிருப்பது உண்மைதான் என்கிறார் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி.

அண்மையில் நிகேய் ஆசியன் ரிவியு பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் முக்ரிஸ் கூறியதாக வெளிவந்த செய்தி உண்மையா என்று அஸ்மினை வினவியதற்கு “உண்மை” என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தார்.

“ஈராண்டுகளில் அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற உடன்பாடு எதுவும் கிடையாது.

“ அப்படிச் செய்யலாம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டது ஆனால், எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை அப்படி ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை”, என்றும் முக்ரிஸ் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்குமுன் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவருக்குப் போதுமான கால அவகாசம் வழங்குவது என்று பக்கத்தான் ஹரப்பானில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்ததாகவும் முக்ரிஸ் அந்நேர்காணலில் கூறியிருந்தார்.