முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், அம்னோ தலைவர்கள் நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க கட்சியை ஒரு “கேடயமாக”ப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இன்று பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கைரி, அடிநிலை கட்சி உறுப்பினர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள் என்றார்.
தான் குறிப்பிடுவது நஜிப்பைத்தான் என்றவர் தெளிவாகவே எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினாலும் நஜிப் அண்மையில் பாரிசான் நேசனல் (பிஎன்) ஆலோசக வாரியத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
“நான் நஜிப்பை மரியாதைக் குறைவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்…….அவர் என்னை அமைச்சராக்கியவர்…..அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
“ஆனால் நான் சொல்லவருவது என்னவென்றால் யாரும் கட்சியைத் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. கட்சியின் அடிநிலையில் உள்ள மில்லியன் கணக்கான உறுப்பினர்கள் அப்பாவிகள்.
“அமைச்சராக இருந்தவன். அதனால் நிகழ்ந்த தவறுகளை அறிந்தவன். அதற்காக மலேசிய மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்”, என்றார் கைரி.
நஜிப் கடும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக கைரி கூறினார்.
இவ்வளவு தெரிந்தும் நஜிப் ஆட்சியின்போது அவர் செய்த முடிவுகளுக்கு எதிராக வாயே திறக்கவில்லை என்று தன்மீது குற்றஞ்சாட்டப்படுவதாகக் குறிப்பிட்ட கைரி, அது உண்மையல்ல என்றார்.
“நான் மார்தட்டிக் கொள்ள விரும்பவில்லை, ஆனாலும் நீங்கள் தெரிந்துகொள்ள நான் இதைக் கூறித்தான் ஆக வேண்டும்…. ஒரு முறை இரு முறை அல்ல பல தடவைகள் நஸ்ரி (அப்துல் அசீஸ்),-யும் நானும் அமைச்சரவை முடிவுகளை எதிர்த்திருக்கிறோம், குறைகூறியுள்ளோம்”, என கைரி கூறினார்.