சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மலேசிய சோசலிசக் கட்சியின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
காஜாங்கில், கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கட்சியின் 21-வது தேசிய மாநாடு நேற்று முடிவுற்ற நிலையில், கட்சியின் புதியத் தலைமைத்துவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன், எம் சரஸ்வதிக்குப் பதிலாக, துணைத் தலைவராகத் தேர்வுபெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக செயல்முறையில் இருந்த தலைமைத்துவ மாற்றம் நிறைவடைந்துவிட்டதாகக் கட்சியின் தலைமைச் செயலாளார் பதவியைத் தக்க வைத்துகொண்ட ஆ சிவராஜன், கூறினார்.
அதுமட்டுமின்றி, கட்சியின் முக்கியப் பதவிகளிலும் மத்தியச் செயலவையிலும் அதிகமான பெண்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கட்சியின் துணைச் செயலாளராக ‘லிசன்’ பவாணி, பொருளாளராக சோ சொக் ஹுவா, துணைப் பொருளாளராக மாதவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளையில், இம்முறை பல புதிய முகங்களும் கட்சியின் மத்தியச் செயலவையில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
அந்த வரிசையில், தே யீ சியு (முன்னாள் தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர்), கோகிலா (வழக்கறிஞர்), சோங் யீ ஷான் (சமூக ஆர்வலர்), சரன்ராஜ் (இளைஞர் ஆர்வலர்) ஆகியோருடன், கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர்களான இரா இராணி, ச்சூ சொன் காய், மா சிவரஞ்சனி, கார்த்தி, நிக் அஜிஸ் ஆகியோரும் அவ்வரிசையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இணைந்து பணியாற்ற ‘கெராக்கான்’ ஆர்வம்
கட்சி மாநாட்டில், முதல் முறையாக, எதிர்க்கட்சியான ‘கெராக்கான்’ தலைமைத்துவப் பிரதிநிதி கலந்துகொண்டதாக சிவராஜன் தெரிவித்தார்.
“பாரிசானில் இருந்து விலகிய கெராக்கான் தற்போது சுதந்திரமாகச் செயல்படுகிறது, பிற முற்போக்குக் கட்சிகளுடன் ஒத்துழைக்க ஆர்வமாக உள்ளது.
“பி.எஸ்.எம். மாநாட்டில் அவர்கள் கலந்துகொண்டது, எங்களின் தொடர் பேச்சு வார்த்தைக்கு வழிவகுக்கும் என நாங்கள் கருதுகிறோம்,” என்றார் அவர்.
இந்த மாநாட்டில், மற்ற அரசியல் கட்சிகளைப் போல, மாநில நிலையில் அலுவலகங்களை அமைக்க பி.எஸ்.எம். முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநாட்டின் போது பருவநிலை மாற்றம் மற்றும் ஜனரஞ்சக வலதுசாரிகளின் எழுச்சி உட்பட சில ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டதாகவும் சிவராஜன் தெரிவித்தார்.