இந்தியர்களுக்கு ஒரு புதுக் கட்சி: வேதமூர்த்தி தொடக்கினார்

பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, இந்தியர் நலன் காக்க ஒரு புது அரசியல் கட்சி உருவாகி உள்ளதாக இன்று அறிவித்தார்.

“மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) சங்கப் பதிவகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு விட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

“இக்கட்சி இந்தியர்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார, சமய, சமூக நலன்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முன்னுக்குக் கொண்டு செல்லவும் பாடுபடும்”, என்றாரவர்.

புதிய கட்சிக்குத் தலைமை ஏற்கவிருப்பதால் ஹிண்ட்ராப் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

விரைவில் அவசரப் பொதுக் கூட்டமொன்று நடத்தி ஹிண்ட்ராபுக்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றாரவர்.