எம்எச் 17: ஐந்து ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லைவே- பயணிகளின் குடும்பத்தார் வேதனை

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்17 விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தார், அச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்எச் 17, 2014 ஜூலை 17-இல், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய- ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு உயரே சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதன்மீது நடத்தப்பட்ட அனைத்துலக அளவிலான விசாரணையில் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஐயுறப்படும் நால்வர் கடந்த மாதம் அடையாளம் காணப்பட்டனர்.

மூன்று ரஷ்யர்களும் உக்ரேனியர் ஒருவரும்தான் அந்நால்வர். விமானத்திலிருந்த 298 பேரைக் கொன்றதற்காக அவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குவார்கள் என்று அந்த விசாரணைக் குழு கூறியது. மூன்று ரஷ்யர்கள் இருக்கலாம் ஆனால், ரஷ்யா தனக்கு அச்சம்பவத்தில் சம்பந்தமில்லை என்று கூறிற்று.

நேற்றிரவு கோலாலும்பூரில் எம்எச் 17-சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கான ஒரு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மலேசியாவில் உள்ள டச்சு, ஆஸ்திரேலிய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்வில் இரவு மணி 9,20க்கு ஒரு நிமிடம் மெளனம் அனுசரிக்கப்பட்டது. இரவு 9.20 எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட நேரமாகும்.

அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான நூர் தியானா யசீரா, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க அதிகாரிகள் விடாது பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். நூர் தியானா எம்எச்17 பணியாளர்களில் ஒருவரான டோரா ஷகிலா காசிமின் புதல்வியாவார்.

இன்னொருவர், பெட்ரிக் சிவஞானம் -இவரின் குடும்பத்தார் மூவர் அதில் பலியானார்கள் – அனைத்துலக விசாரணை தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் எனவே, மலேசிய அரசாங்கம் சரியான தகவல்களை வழங்கி ஒரு தெளிவை உண்டுபண்ண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.