உங்கள் சர்ச்சைக்குள் மற்றவர்களை இழுக்காதீர்கள்- ஐஜிபி

பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளிச் சர்ச்சை விரிவடைந்து அதில் போலீசின் நேரம் வீணடிக்கப்படுவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர்.

பாலியல் காணொளிச் சர்ச்சையால் அஸ்மினுக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் விரிசல் விரிவடைந்து, காணொளியில் காண்பது உண்மையென்றால் முன்னர் பதவி விலக வேண்டும் என்று பின்னவர் கூறியுள்ளார்.

இரு தரப்பினருமே போலீஸ் இவ்விவகாரத்தை ஆராய்ந்து காணொளியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. அதைத்தான் செய்தோம். அதற்காக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று அப்துல் ஹமிட் கூறினார்.

“எல்லாமே அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே காணொளி உண்மையானதுதானா என்று போலீஸ் கண்டுபிடித்துக் கூற வேண்டும் என்றார்கள்.

“நான் ஆராய்ந்து கூறினேன். உடனே நான் அரசியல் பேசுவதாகக் கூறத் தொடங்கினார்கள்”, என்று ஐஜிபி கூறியதாக த மலேசியன் இன்சைட் தெரிவித்தது.

இதன் தொடர்பில் வியாழக்கிழமை அறிக்கை விடுத்த அப்துல் ஹமிட், காணொளியை சைபர்சிக்கியூரிட்டியின் ஆய்வுக்கு அனுப்பியதாகவும் அவர்கள் காணொளி உண்மையானதுதான் என்றும் அதில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறி விட்டார்கள் என்றார்.

ஆனால், அதில் உள்ள இரு ஆடவரில் ஒருவர் பொருளாதார அமைச்சர்தானா என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றார்.

இச்சர்ச்சை விரிவடைந்து மற்றவர்களையும் இழுத்துக் கொண்டிருக்கிறது என்று அப்துல் ஹமிட் கூறினார்,

உள்சண்டையை சபைக்குக் கொண்டு வராதீர்கள். இதுபோன்ற சில்லறை விவகாரத்தில் போலீசின் நேரம் வீணாகக் கூடாது என்றாரவர்.