அன்வாரின் வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தை அரசியலாக்காதீர்கள்- பத்திரிகைச் செயலாளர்

அன்வார் இப்ராகிம் அவரது புக்கிட் செகாம்புட் இல்லத்தில் நடத்தும் வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தை அரசியலுடன் தொடர்புப் படுத்த முயல்வது ஒரு பொறுப்பற்ற செயல் என பிகேஆர் தலைவரின் பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் துங்கு அபைடா கூறினார்.

அதை அரசியலாக்குவதை நிறுத்தும்படி எல்லாத் தரப்பினரையும் துங்கு நஷ்ருல் ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.

“அன்வாரே (நேற்று) கூறியபடி இது ஒரு வழக்கமான சமய நிகழ்வு. ஆறு மாதங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்பட்டு வருகிறது. அதற்குமுன் பல ஆண்டுகளாக வியாழக்கிழமைகளில் நடந்து வந்தது.

நேற்று செய்தியாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் அடங்கிய ஒரு குழு திடீரென்று வீட்டைச் சூழ்ந்துகொண்டதும் அன்வார் குழம்பிப் போனார் என்று பெரித்தா ஹரியான் அறிவித்திருந்தது.

“இது ஒரு பிரார்த்தனைக் கூட்டம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை நேரத்தில் நடத்துகிறோம். இதில் என்ன பிரச்னை? இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை”, என்றவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் அன்வாரின் துணைவியார் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உள்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்ற ஒரு நிகழ்வு நேற்று ஷா ஆலமிலும் நடந்து அதில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கலந்து கொண்டார். அஸ்மினுக்கு எதிரான சாக்கடை அரசியலை நிராகரிப்பதற்காக அச்சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டதாம்