முக்ரிஸ்: பக்காத்தான் புது ஏகாதிபத்தியவாதிகளின் கருவி

அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் அமைக்குமானால் அந்நிய வல்லரசுகள் நாட்டைத் தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் என அனைத்துலக வாணிக தொழிலியல் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதீர் கூறுகிறார்.

அவர் அம்னோ பொதுப் பேரவையில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். விரிவான நோக்கத்தைக் கொண்ட புது ஏகாதிபத்தியவாதிகள் பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

அதனால் கடந்த பல தசாப்தங்களாக மக்கள் உருவாக்கிய அரசாங்கம் என்றென்றும் இழக்கப்பட்டு  விடும் என்றார் அவர்.

“இந்த நாட்டை காலனியாக்க விரும்பும் அந்நிய வல்லரசுகளின் கருவியாக எதிர்க்கட்சிகள் திகழ்வதை நாம் உணரவில்லையா ?”

“நாட்டை ஆக்கிரமிக்க பெரும் நிதிகளுடன் அவை ஆதரவு அளிக்கின்றன. அது புதிய பாணியிலான புது காலனித்துவம்,” என முக்ரிஸ் கூறினார். அவர் கெடாவைச் சேந்ர்க பேராளர் ஆவார்.

ஆகவே பொது மக்கள் பக்காத்தான் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முக்ரிஸ் கூறினார்.

ஆனால் அவர் தமது கூற்றுக்கு ஆதரவாக எந்த எடுத்துக்காட்டுக்களையும் வழங்கவில்லை.

அம்னோ மற்றும் பிஎன் தலைவர்களுக்கு எதிராக Maha Firaun, Maha Zalim போன்ற இழிவுபடுத்தும் சொற்களைப் பக்காத்தான் வேடதாரிகள், பயன்படுத்துவதாகவும் முக்ரிஸ் கூறிக் கொண்டார். 22 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்த தமது தந்தையாரான மகாதீரை அந்தச் சொற்கள் இலக்காக கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தங்களை அவர்கள் இஸ்லாமியத் தன்மை கொண்டவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அம்னோவையும் பிஎன்- னையும் களங்கப்படுத்த அத்தகையச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.”

TAGS: