மேலும் 6 ஜேபிஜே அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்

இன்று பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை(ஜேபிஜே)யைச் சேர்ந்த மேலும் ஆறு அமலாக்க அதிகாரிகள் பட்டர்வர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.

அவர்கள் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் இயக்குனரிடமிருந்து தவறிழைக்கும் அந்நிறுவனத்தின் லாரி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்குக் கையூட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதே குற்றத்துக்காக மொத்தம் 18 ஜேபிஜே அதிகாரிகள் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் கட்டம் கட்டமாக நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்.

நேற்று , ஐந்து ஜேபிஜே அமலாக்க அதிகாரிகளும் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணைய (ஸ்பாட்) முன்னாள் பணியாளர் ஒருவரும் லாரிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு மொத்தம் ரிம73,600 கையூட்டு பெற்றதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மே 28-இல் எண்மர் 2015 ஜனவரிக்கும் 2018 ஆகஸ்டுக்குமிடையில் மொத்தம் ரிம135,810 கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.

-பெர்னாமா