55 பாலிடெக்னிக் மாணவர்கள் மருத்துவமனையில்:: நச்சு உணவு காரணமா?

நேற்று பினாங்கில் வாக்காளர்கள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலேக் பூலாவ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நச்சு உணவை உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவசரமவசரமாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இரவு மணி 10வரை 55 மாணவர்களுக்கு பாலேக் பூலாவ் மருத்துவமனையில் வயிற்று வலிக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக பினாங்கு எக்ஸ்கோ (ஆட்சிக்குழு உறுப்பினர்) டாக்டர் அரிப் பஹார்டின் கூறினார்.

“55 மாணவர்களும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்”, என்றவர் நேற்றிரவு பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

நச்சுணவு எப்படி வந்தது என்பதைக் கண்டறியுமாறு உத்தரவு பிறப்பித்திருப்பதாகக் கூறிய அவர், அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருமே வாக்காளர்களின் பொறுப்பு குறித்து தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த விளக்கமளிப்புக் கூட்டத்துக்குச் சென்றிருந்தவர்கள் என்று தெரிகிறது. அக்கூட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கி நண்பகலில் முடிந்தது.

மொத்தம் 207 மாணவர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு நண்பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவை உட்கொண்ட மாணவர்கள் மாலை மணி 4 வாக்கில் வயிறு வலிப்பதாக புகார் செய்யவே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

பெர்னாமா