மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருக்க அம்னோவும் பாஸும் பாடுபடும்- ஹாடி

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அவரது கட்சியும் அம்னோவும் டாக்டர் மகாதிர் முகம்மட்டை முழுத் தவணைக்கும் பிரதமராக வைத்துக்கொள்ளப் பாடுபடும் என்று கூறினார்.

மகாதிர் அவரது தவணைக்காலம் முடிவதற்குமுன்பே பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமுடம் ஒப்படைப்பது என்று பக்கத்தான் ஹரப்பான் ஒருமித்த முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரப்பானின் மற்ற கட்சிகளில் “இஸ்லாமிய தலைமைத்துவத் தன்மை” இல்லை என்பதால் மகாதிரின் மலாய் முஸ்லிம் கட்சியான பெர்சத்துவைத் தற்காப்பது முக்கியம் என்று ஹாடி கூறியதாக ஹராகா டெய்லி தெரிவித்தது.

மேலும், ஹரப்பானில் முஸ்லிம்-அல்லாதார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் அவர் சொன்னார்.

“பெர்சத்துவுக்கு (நாடாளுமன்றத்தில்) 11 இடங்கள்தான் உண்டு. அரசாங்கத்தில் அவர்களின் நிலை வலுவானதல்ல.

“அதனால்தான் நாங்கள் அம்னோவின் துணையுடன் மகாதிரை முழுத் தவணைக்கும் பிரதமராக வைத்துக்கொள்ளப் பாடுபடுவோம்.

“இதுதான் எங்களின் நிலைப்பாடு. மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருக்க வேண்டும்”, என்று ஹாடி கூறினாராம்.