‘உண்டி 18 வாக்கெடுப்புக்கு வராத செனட்டர்கள் மன்னிப்பு கேட்க வெண்டும் அல்லது பதவி விலக வேண்டும்’

18 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் சட்டவரைவு மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அன்றைய தினம் அவைக்கு வராத செனட்டர்கள் அதற்கான காரணைத்தை அறிவிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

“வியாழக்கிழமை வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18க்குக் குறைப்பதற்கு அரசமைப்பில் திருத்தம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டவரைவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அங்கில்லாத 20 செனட்டர்களும் நியாயமான காரணமின்றி வராமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மேலவையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

வாக்களித்திருந்தால் அது, நாட்டுக்கு இப்போதைய மேலவை உறுப்பினர்களின் மிகப் பெரிய பங்களிப்பாக இருந்திருக்கும் , ஆனால் அவர்கள் வராதது “அப்பட்டமாக கடமை தவறிய ஒரு செயல்” என்று லிம் கூறினார்.

ஜூலை 16-இல் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் முதல் முறையாக மக்களவையில் அரசமைப்பில் திருத்தம் செய்ய வழிகோலும் அச்சட்டவரைவைக் கொண்டுவந்தபோது 222 எம்பிகளில் 211 பேர் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஜூலை 25-இல் அதே சட்டவரைவு மேலவையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அது வாக்களிப்புக்கு விடப்பட்ட தினம் 70 செனட்டர்களில் 20-பேர் அவைக்கு வரவில்லை.

அந்த 20 பேரில் மூவர் பக்கத்தான் ஹரப்பான் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அதன் தோழமைக் கட்சியான உப்கோ-வைச் சேர்ந்தவர்.