இந்திராவின் மகளை ‘மறைத்து வைத்துள்ளவர்களிடம்’ விசாரித்தீர்களா? பாஸிடம் இங்காட் கேள்வி

இந்திரா காந்தியைப் பிரதிநிதிக்கும் குழுவான இங்காட், இந்திரா காந்தியின் மகளை பாஸுடன் நட்புகொண்ட என்ஜிஓ-கள்தான் மறைத்து வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள தயாராக இல்லை.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் நேற்று அக்குற்றச்சாட்டை மறுத்து அப்படிக் குற்றஞ்சாட்டியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதற்கு இங்காட் அவ்வாறு பதிலளித்தது.

இங்காட் தலைவர் அருண் துரைசாமி, அதில் சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கும் தென் தாய்லாந்து பிரிவினைவாதக் கும்பல்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறியதுடன் அவ்வாறு கூறியதை மீட்டுக்கொள்ளப்போவதில்லை என்றும் சொன்னார்.

“(எங்கள் குற்றச்சாட்டுக்கு) ஆதாரம் உண்டா என்றுகூடக் கேட்காமல் துவான் இப்ராகிம் வேகம் வேகமாக தற்காத்துப் பேசத் தொடங்கி விட்டார்.

“அம்மாநிலத்தில் (கிளந்தானில்) அவர்களுடன் நட்பாக அல்லது நேரடி தொடர்பில் உள்ள என்ஜிஓ-களிடம் அது பற்றி விசாரித்தாரா என்பதுகூட சந்தேகமாக உள்ளது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்திராவின் மகள் இப்போது கிளந்தானில் பதிவு செய்யப்படாத சமயப் பள்ளி ஒன்றில் பயின்று வருவதாக அருண் துரைசாமி கூறினார்.