ஐஜிபி: இந்திரா காந்தி மகளைத் தேடும் முயற்சியை ‘இரட்டிப்பாக்கியுள்ளோம்’

இந்திரா காந்தியையும் அவரின் மகள் பிரசன்னா திக்‌ஷா-வையும் ஒன்றிணைக்க போலீஸ் உறுதிபூண்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

இந்திரா காந்தியின் மகளைத் தேடும் படலத்துக்கு “ஒரு நல்ல முடிவைக் கொண்டுவர வேண்டுமென்பதில்” நேரடி அக்கறை கொண்டிருப்பதாக ஐஜிபி கூறினார்.

“இவ்விவகாரத்தில் நானே நேரடி கவனம் செலுத்துகிறேன் என்பதை மலேசிய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு நல்ல முடிவைக் காண விரும்புகிறேன்.

“இது தாய்-சேய் சம்பந்தப்பட்ட ஒன்று. மலேசிய மக்களின் இதயத்தைத் தொட்ட ஒரு சோக வழக்கு.

“போலீசாரிடம் முயற்சியை இரட்டிப்பாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன். போலீசும் தேடிக் கொண்டிருக்கிறது. இதற்குமேல் என்னால் விவரிக்க இயலாது”, என்று ஐஜிபி இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திராவின் முன்னாள் கணவர் முகம்மட் ரிட்வான் அப்துல்லா, 2009-ஆம் ஆண்டில் பிரசன்னா 11 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரைக் கடத்திச் சென்றார். குழந்தையையும் இஸ்லாத்துக்கு மதமாற்றினார். அதன் பிறகு அவர்களைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.