பாலியல் காணொளி விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறதே- ஹசான் கரிம்

பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் காணொளி வழக்கில் சட்டம் நியாயமாகவும் விரைவாகவும் செயல்படுவதைக் காண்பிக்க வேண்டும் என பாசிர் கூடாங் எம்பி ஹசன் பிரதமரையும் சட்டத்துறைத் தலைவரையும் ஐஜிபியையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“போலீசார் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் ஒப்படைக்க நீண்ட காலம் ஆகிறது. இப்போது இவ்விவகாரம் ஐஜிபி அப்துல் ஹமிட் படோர் மற்றும் சட்டத்துறைத் தலைவர் டாம்மி தாமஸ் கைகளில் உள்ளது . இதைச் சொல்ல ஒருவர் வழக்குரைஞராக அல்லது சட்ட நிபுணராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை”, என்று ஹசான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இவ்வழக்கு தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டனர்.

“முக்கியமான சாட்சி ஒருவர், காணொளியில் உள்ள ஒருவர் தானே என்பதை எந்தவொரு வற்புறுத்தலுமின்றித் தானாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

“ஐஜிபியும் சட்டத்துறைத் தலைவரும் பாலியல் காணொளி தொடர்பில் அவர்களின் கடமையைச் செய்யத் தவறினால் சட்டப்படி கடும் தவறு செய்தவர்கள் ஆவார்கள்.

“நீங்கள் மலேசிய அரசமைப்பைக் காப்பதிலும் சட்டத்தை நிலைநாட்டுவதிலும் கடமை தவறாதவர்கள் என்பதை மலேசியருக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் நிரூபித்துக் காட்டுங்கள்”, என்று ஹசான் அறைகூவல் விடுத்தார்.