நேற்று சுல்தான் அப்துல்லா ரி’ஆதுடின் அல்-முஸ்டபா அரியணை அமரும் சடங்கில் தம்மால் கலந்துகொள்ள முடியாமல் போனதற்குக் கடைசி நேர இடமாற்றமே காரணம் என்று நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“காலை மணி 6.30க்கு இருக்கை ஏற்பாடுகளில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
“முன்னாள் பிரதமர் என்ற முறையில் முதல் வரிசையில் பத்தாவது இடம் எனக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் எனக்கு பகாங் ஓராங் புசார் (பெரு மக்கள்) வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
“முன்னாள் பிரதமருக்கும் பகாங் பெருமக்களுக்கும் உரிய சடங்குப்பூர்வ ஆடைகள் வெவ்வேறானவை…….அத்துடன் அந்த ஆடைகள் பெக்கானில் இருந்தன. எடுத்துவர நேரம் போதாது”, என நஜிப் இன்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
நஜிப் , பகாங் டத்தோ ஷாபண்டார் ஆவார். அந்த வகையில் அவர் பகாங் அரச மன்ற உறுப்பினர்களில் ஒருவர்.
இதனிடையே , பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் இருக்கை ஏற்பாடுகளைச் செய்தது புத்ரா ஜெயா அல்ல என்று ஃபிரி மலேசியா டுடே-இடம் கூறினார்.
“அதைச் செய்தது அரண்மனையின் சடங்கு மற்றும் மரபு முறை துறை”, என அப்பேச்சாளர் தெரிவித்தார்.
ஆனால், நஜிப்பின் முன்னாள் உதவியாளர் இஷாம் ஜலில் வேறு மாதிரியாகக் கூறினார். நஜிப்பின் அமரும் இடத்தை மாற்றாவிட்டால் அரியணை அமரும் சடங்கில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என மகாதிர் மிரட்டினாராம்.
“நஜிப் சடங்குமுறைகளை மதிப்பவர். கடைசி நேரப் பிரதமர்துறை
குறுக்கீட்டால் நஜிப்பால் அரியணை அமரும் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று.
“நஜிப் அதில் கலந்துக் கொள்வது மகாதிருக்குப் பிடிக்கவில்லை. அவரைவிட நஜிப் புகழ்பெற்று விளங்குவதைக் காண அவருக்குப் பொறுக்கவில்லை”, என இஷாம் கூறினார்.