இந்திரா காந்தி தன் மகள் பற்றி அறிந்துகொள்ள ஐஜிபி-யைச் சந்திக்க விரும்புகிறார்

எம்.இந்திரா காந்தி, காணாமல்போன அவரின் மகள் பிரசன்னா திக்‌ஷா-வைத் தேடும் பணியில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோரைச் சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

பிரசன்னாவைத் தேடும் பணியை போலீஸ் முடுக்கி விட்டிருப்பதாக அண்மையில் ஐஜிபி கூறியது இந்திராவுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

மலாய் மெயில் நாளேட்டிடம் பேசிய இந்திரா, “முந்தைய போலீஸ் தலைவர்கள் ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தட்டிக்கழித்து வந்துள்ள வேளையில் ஒரு ஐஜிபி இப்படிப் பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது”, என்றார்.

“10 ஆண்டுகள் ஆனாலும்கூட போலீசிடமிருந்து தகவல் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்காக விரைவில் ஹமிட்டைச் சந்திக்கப் போகிறேன்”, என்றார்.

“என் மகளைக் கண்டுபிடிக்க போலீஸ் ஏதாவது செய்வதாக தெரிந்தால்கூட மகிழ்ச்சி அடைவேன்”, என்றாரவர்.

திக்‌ஷா பத்தாண்டுகளுக்கு முன் பதினோரு மாதக் குழந்தையாய் இருக்கும் போது இந்திராவின் முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்டார்.