டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விரும்பினால் அவர் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க்குடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யத் தயார் என்று கிளந்தான் பாஸ் அரசு அறிவித்துள்ளது.
லிம் சமயப் போதகரைக் குற்றவாளி என்று நம்பினால் அவர் கிளந்தான் வந்து அது குறித்து அவரிடமே நேரடியாக விவாதிக்கலாம் என்று மாநில பாஸ் தொடர்புச் செயலாளர் ச்சே அப்துல்லா மாட் நாவி தெரிவித்ததாக உத்துசான் ஆன்லைன் கூறிற்று.
அவர் கிளந்தான் வந்துபோவதற்கான செலவுகளை மாநில அரசு ஏற்கும். லிம் அவரின் ஆதரவாளர்களையும் அழைத்து வரலாம் என்றாரவர்.
ஜாகிர் ஆகஸ்ட் 7-லிருந்து ஆகஸ்ட் 10வரை கிளந்தானில் பல நிகழச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 9-இல் ஜாகிர் உரையாற்றும் அதே மேடையில் லிம்மும் பேசலாம் என ச்சே அப்துல்லா கூறினார்.
ஆகஸ்ட் முதல் நாளில் எழுத்தாளர் அனாஸ் ஜுபேடிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட லிம், அதில் ஜூபேடி முன்மொழிந்திருப்பதுபோல் ஜாகிர் மலேசியாவை விட்டு தாமாக வெளியேறுவது நல்லது என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குத்தான் இந்த எதிர்வினை.