யுனிவர்சிடி புத்ரா மலேசியா(யுபிஎம்) வாரியத் தலைவர் சைட் ரஸ்லான் சைட் புத்ரா ஜமாலுல்லாயில் பதவிநீக்கம் செய்யப்பட்டது, அதுவும் அவர் பல்கலைக்கழகத்தின் உயர் நிர்வாகத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில் பதவிநீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
த மலேசியன் இன்சைட்டில் வெளிவந்த செய்தியின்படி சைட் ரஸ்லானுக்கு ஜூலை 17-இல் பதவிநீக்கக் கடிதம் கொடுக்கப்பட்டது. கடிதத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் கையெழுத்திட்டிருந்தார். சைட் ரஸானின் இடத்தில் யுனிவர்சிடி மலாயா முன்னாள் துணை வேந்தர் கவுத் ஜஸ்மோன் நியமிக்கப்படுவார் என்று அறியப்படுகிறது.
சைட் ரஸ்லான் கடந்த அக்டோபரில்தான், மூன்றாண்டுகளுக்கு, யுபிஎம் வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒராண்டுகூட ஆகவிலலை, அதற்குள் ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பதவிநீக்கத்துக்குக் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சைட் ரஸ்லான் பதவிநீக்கம் பற்றிக் கவலைப்படவில்லை. போவதற்குள் விசாரணையை முடித்துவிட விரும்புகிறார். “யுபிஎம் எதிர்கால நன்மைக்காக” அதைச் செய்து முடிக்க விரும்புவதாக அவர் சொன்னார்.
“ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரம் அமைச்சருக்கு உண்டு, என்றாலும் கடிதம் கொடுக்ப்பதற்குமுன் என்னுடன் கலந்துபேசி இருந்தால் எனக்கு மரியாதையாக இருந்திருக்கும்.
“மக்களுக்குக் கடிதத்தில் உள்ளது தெரியாது என்பதால் நான்தான் தவறு செய்து விட்டதாக அவர்கள் நினைக்கக் கூடும்”, என்றார்.