செனட்டரைப் பதவி விலகக் கோரும் தீர்மானத்துக்கு 11ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு

சபலமூட்டுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் என முன்மொழிந்த செனட்டர் முகம்மட் இம்ரான் அப்ட் ஹமிட் பதவி விலக வேண்டும் என்று கோரும் தீர்மானத்துக்கு இதுவரை 11,000-க்கு மேற்பட்ட கையொப்பங்கள் கிடைத்துள்ளன.

Change.org என்னும் அத் தீர்மானத்தை வியாழக்கிழமை தொடக்கிவைத்த சமூக ஆர்வலர் முஜாஹிடின் சுல்கிப்ளி, பாதிக்கப்பட்டவர்மீதே பழிபோடும் செனட்டரின் போக்கு “அற நெறிகளுக்கும் சமூக ஒழுங்குகளுக்கும்” எதிரானது என்றார்.

இத்தீர்மானம் அவர் செனட்டர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிகேஆரையும் மேலவையிலிருந்து விலக்க வேண்டும் என்று யாங் டி பெர்த்துவான் ஆகோங்கையும் கேட்டுக்கொள்கிறது.

“அவர் பாதிக்கப்பட்டவர்மீதே பழி போடுகிறார். இது அற நெறிகளுக்கும் சமூக ஒழுங்குகளுக்கும் எதிரானது.

“ஆண்கள் பெண்களுக்கும் சிறாருக்கும் எதிராக தவறு செய்துவிட்டு தவற்றுக்கு அவர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களின் ஆடைகளும்தான் காரணம் என்று கூறித் தப்பிக்கொள்ள முடிந்தால் பிறகு பெண்களும் சிறாரும் நிம்மதியாக உறங்க முடியாது”, என்று அத்தீர்மானம் கூறுகிறது.

“இப்படிப்பட்ட வக்கிர புத்தி கொண்டவர்கள் இந்நாட்டில் இருக்கக்கூடாது”, என்று முஜாஹிடின் கூறினார்.

பெண்களால் ஆசை ஊட்டப்பட்டுதான் ஆண்கள் பாலியல் வல்லுறவு, குடும்பத்தினருடன் தகாத உறவு வைத்துக்கொள்ளுதல், ஆபாசப் படங்களைப் பார்த்தல் முதலிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அதைத் தடுத்து ஆண்களைப் பாதுகாக்க சட்டம் தேவை என்று இம்ரான் முன்மொழிந்தார்.

பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் அவரது பரிந்துரைக்கு அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் சமூக ஆரவலர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் மன்னிப்பு கேட்டுப் பரிந்துரையை மீட்டுக்கொண்டார்.