ஜோகூரில்தான் குழந்தைகளை வீசியெறியும் சம்பவங்கள் அதிகம்

நாட்டில் குழந்தைகளை வீசியெறியும் சம்பவங்கள் ஜோகூரில்தான் அதிகம் நடப்பதாக பட்டியலிடப்பட்டிருப்பதைக் கண்டு அம்மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் லியோ சாய் துங் வருத்தமடைகிறார்.

இவ்வாண்டு ஜூலைவரை 13 குழந்தைகள் ஜோகூரில் வீசியெறியப்பட்டிருப்பதாக போலீஸ் மற்றும் சமூக நலத் துறை புள்ளிவிவரங்கள் கூறுவதாக லியோ கூறினார்.

ஜோகூர் பாருவில் அப்படிப்பட்ட சம்பவங்கள் மிகுதியும் நடக்கின்றன. அதற்கு அடுத்து பத்து பகாட்டில், அதைத் தொடர்ந்து கூலாயில் என்றாரவர்.

இப்புள்ளிவிவரத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்ட பிள்ளைகள் சேர்க்கப்படவில்லை. அது சமூகநலத் துறைக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.

“குழந்தைகள் வீசியெறியப்படும் சம்பவங்கள் அதிகம் நடப்பதை ஜோகூர் கடுமையாகக் கருதுகிறது.

“சமூக விவகாரங்கள்மீது விழிப்புணர்வுத் திட்டங்கள் தொடர வேண்டும். அதன் மூலமாகத்தான் குழந்தைகள் வீசியெறியப்படும் சம்பவங்களைக் குறைக்க முடியும்”, என்றாரவர்.