ஜோகூர் மந்திரி புசார் டாக்டர் ஸக்ருடின் ஜமால் நச்சுக்கழிவு மாசுக்களால் பாதிக்கப்பட்ட பாசீர் கூடாங் மக்களிடம் இன்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பாசீர் கூடாங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் பேசிய மந்திரி புசார், தூய்மைக்கேட்டு விவகாரத்தை இன்னும் நல்ல விதமாகக் கையாண்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டார்.
“மாநில அரசுத் தலைவர் என்ற முறையில் பாசீர் கூடாங் மக்களிடம் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
“நீண்ட காலத்துக்கு முன்பு மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டபோது அவை குடியிருப்பாளர்கள்மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது”, என்று ஸக்ருடின் கூறியதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
ஆனால், விரல் நீட்டிக் குற்றம் சொல்வதால் பிரச்னை தீர்ந்து விடாது என்று கூறிய அவர், ஜோகூர் அரசு இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளும் என்றார்.