“முஹைடினைப் பொறுத்த வரையில் ‘நான் இனவாதியே ஆனால் மற்றவர்கள் என்னை விட தீவிரமான பேரினவாதிகள்’ எனச் சொல்வது துணைப் பிரதமர் ஒருவருக்கு அழகல்ல.”
மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின்
மாற்றத்திற்கான வாக்காளர்: முஹைடின் யாசின் அவர்களே, அம்னோ, மலாய் உரிமைகள் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் கட்சியாகும். ஆனால் டிஏபி ஒரு நாள் கூட சீனர் உரிமைகள் பற்றிப் பேசியது கிடையாது. அதனால் அம்னோவே இனவாதி.
டிஏபி மலாய் எதிர்ப்புக் கட்சி என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் உங்கள் கைப்பாவையான மசீச, டிஏபி சீனர்களுக்கு எதிர்ப்பானது என்கிறது. ஆகவே பிஎன், டிஏபி மலாய் எதிர்ப்புக் கட்சியா அல்லது சீனர் எதிர்ப்புக் கட்சியா முடிவு செய்வது நல்லது.
நாகரீகமான எந்த ஒரு நாட்டிலும் பெரும்பான்மையினர் சிறிய தியாகங்களைச் செய்து சிறுபான்மையினரைப் பாதுகாக்கின்றனர். ஆனால் இங்கு எல்லாம் முடியும் என்னும் நாட்டில் ( Bolehland ) சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர். பெரும்பான்மையினருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது.
வரிகளில் பெரும்பகுதியை சிறுபான்மையினர் செலுத்துகின்றனர். அந்த சிறுபான்மையினர் புலம் பெயர்ந்து விட்டால் வருமானத்தில் பெரும்பகுதி குறைந்து விடும். அப்போது பெரும்பான்மையினர் புல்லைத்தான் உட்கொள்ள வேண்டும்.
அந்த சூழ்நிலையில் மலாய்க்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள “சிறப்பு உரிமைகளினால்” என்ன பயன்? இது சாதாரண பொருளாதார விளக்கம். இருந்தும் அம்னோ தலைவர்கள் அதனை உணரத் தவறியுள்ளனர். நானும் ஒருமலாய்க்காரன்.
குழப்பம் இல்லாதவன்: இனவாதம் என்பது ஒரு நாட்டுக்குள் மற்ற இனங்களைக் காட்டிலும் ஒர் இனம் மேலானது எனப் பிரகடனம் செய்து அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகும்; வரிப் பணத்தைக் கொண்டு மற்ற இனங்களைக் காட்டிலும் ஒர் இனத்துக்குக் கூடுதலான வாய்ப்புக்கள் கொடுப்பதாகும்; ஏற்றத் தாழ்வான ஆட்டக் களத்தில் போட்டியிடுமாறு மற்ற இனங்களைக் கட்டாயப்படுத்துவதாகும் ( குத்துச் சண்டைப் போட்டியில் உங்கள் எதிரியின் ஒரு கரத்தை கட்டி விடுவதாகும்); ஒர் இனத்தைச் சேர்ந்த அமைப்புக்கள் செய்வதை அனுமதித்து விட்டு மற்ற இன அமைப்புக்கள் அதனையே செய்யும் போது மற்ற “தாழ்வான” இனங்கள் பற்றி ஆவேசமான அறிக்கைகளை வெளியிடுவது ( அவர்களை குடியேறிகள், பாங்சா என அழைப்பது);
பரந்த நோக்கத்தைக் கொண்ட மலாய்க்காரர்கள் உட்பட பொதுவாக மக்கள் இத்தகைய போக்கை ஏற்கவில்லை என்பதை அம்னோ உணர வேண்டும். இல்லையேல் வரும் தேர்தலில் அரசுக்கு எதிராக வீசும் அலையில் அது அடித்துச் செல்லப்பட்டு விடலாம்.
அடையாளம் இல்லாதவன்: யார் தீவிரமான பேரினவாதி என்பதில் போட்டியா? முஹைடினைப் பொறுத்த வரையில் ‘நான் இனவாதியே ஆனால் மற்றவர்கள் என்னை விட தீவிரமான பேரினவாதிகள்’ எனச் சொல்வது துணைப் பிரதமர் ஒருவருக்கு அழகல்ல. அதற்காக முஹைடின் வெட்கப்பட வேண்டும்.
டிஜேகே: “முதலாவது பொதுத்தேர்தலின் போது தனியாக அரசாங்கத்தை அமைக்கக் கூடிய வலிமை அம்னோவுக்கு இருந்தது. ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டோம்,” என முஹைடின் கூறுகிறார்.
நாம் அம்னோ தோற்றம் பெறாத காலத்திற்கு நாம் செல்வோம். அப்போது மலாயாவில் இன அடிப்படைக் கட்சிகள் இல்லை. எல்லோரும் அமைதியாக இணைந்து வாழ்ந்தனர்.
புன்னகை: அது அதிகாரப் பகிர்வு போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அது அல்ல. ஜனநாயக கோட்பாட்டை அம்னோ தனக்குச் சாதகமாக முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது. அம்னோ ஏதாவது ஒன்றைச் சொல்லும் போது மற்ற கட்சிகள் ஆட்சேபிக்க முடியவில்லை. காரணம் அம்னோ பெரும்பான்மைக் கட்சியாகும்.
சிறுபான்மையினர் அதனைப் பின் தொடர்ந்து சென்று எல்லா உறுப்புக் கட்சிகளின் தலைவர்களைப் போல எலும்புத் துண்டுகளுக்காக காத்திருக்க வேண்டும்.
டிஎஸ்சி: அம்னோ இருப்பதுதான் மலேசியாவில் மோசமான விஷயமாகும். போட்டி நிறைந்த உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அம்னோ, இனம் பற்றி மட்டுமே பேசுகிறது. நமது கல்வித் தரம், சுகாதாரக் கவனிப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றை மேம்படுத்துவது பற்றி அது சிந்திப்பதே இல்லை.
பிஎன் -னை ஆட்சியிலிருந்து அகற்றுவதின் மூலம் அம்னோவுக்கு இயற்கையான மரணத்தைக் கொண்டு வருவதே நமக்கு உள்ள ஒரே வழியாகும்.