நேற்றிரவு சுங்கை டாரா ஆலயச் சண்டையில் ஒருவரின் கை பகுதி வெட்டுண்டது. சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 16பேரை போலீஸ் தடுத்து வைத்துள்ளது . அச்சம்பவம் தொடர்பில் இன்னும் சிலர் தேடப்படுகிறார்கள்.
பெஸ்தாரி ஜெயாவில் ஆலய இரத ஊர்வலத்தின்போது இரு கும்பல்களுக்கிடையில் வாய்ச்சண்டை முற்றிச் சண்டையில் முடிந்ததாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஃபாட்சில் அஹமட் கூறினார்.
“கும்பல்களுக்கிடையிலான சண்டையில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்தார். அவரது இடது உள்ளங்கையின் ஒரு பகுதி துண்டானது. சுங்கை பூலோ மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது”, என்றாரவர்.
சம்பவம் நடந்த இடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார் என ஃபாட்சில் கூறினார். அவருக்கு ஆறு தையல் தேவைப்பட்டது.
16 பேரைத் தடுத்து வைத்திருப்பதுடன் போலீசார் பல ஆயுதங்களையும் கைப்பற்றினர்.