தீபக்கின் சிவில் வழக்கைத் தள்ளுபடி செய்வதா என்பதை நீதிமன்றம் அக்டோபரில் முடிவு செய்யும்

ஒரு வணிகரான தீபக் ஜெய்கிஷன், தொடுத்துள்ள ரிம52.6 மில்லியன் சிவில் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி நஜிப் அப்துல் ரசாக் மற்றும் நால்வர் செய்துள்ள மனுமீது கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அக்டோபர் 23-இல் தீர்ப்பளிக்கும்.

வாய்மொழி வாதங்களைக் கேட்ட பின்னர் நீதிபதி அசிமா ஒமார் அந்த தேதியை முடிவு செய்தார் என நஜிப்பையும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூரையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் டேவிட் மெத்தியூஸ் கூறினார்.

தீபக், அவரின் சகோதரர் ராஜேஷ் மற்றும் அவர்களின் நிறுவனமான ரேடியண்ட் ஸ்பெலண்டர்ஸ் சிவில் வழக்கைத் தொடுத்துள்ளனர்.

நஜிப், ரோஸ்மா தவிர்த்து நஜிப்பின் சகோதரர் அஹமட் ஜோகாரி ரசாக், தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் ரகிம், பேங்க் ரக்யாட் தலைவர் ஷுக்ரி முகம்மட் சாலே ஆகியோரையும் தீபக் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நஜிப், ரோஸ்மா ஆகியோரால் தனக்குத் தொழிலில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி அதற்கு இழப்பீடு கோருகிறார் தீபக்.