பாஸ்: ஒத்துப்போகாத டிஏபி அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

டிஏபி அமைச்சர்கள் அமைச்சரவையின் முடிவுடன் ஒத்துப்போவதில்லை என்றும் அப்படி ஒத்துப்போகாதவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, நான்காம் ஆண்டு மாணவர்களின் பகாசா மலேசியா பாடத்தில் அரபுச் சித்திர எழுத்தின் அறிமுகம் போன்ற விவகாரங்களில் அவர்கள் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.

ஜாகிரை நாட்டை வெளியேற்றும் விசயத்தில் உள்துறை அமைச்சர் தெளிவான விளக்கம் அளித்துள்ள போதிலும் அவரை வேளியேற்றியே ஆக வேண்டும் என்று டிஏபி பிடிவாதம் பிடிக்கிறது என்று துவான் இப்ராகிம் குறிப்பிட்டார்.

‘காட்’ எழுத்துமுறை அறிமுகத்துக்குப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பச்சை விளக்குக் காண்பித்து விட்ட பிறகும் டிஏபி கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்றாரவர்.

“எனவே, அரசாங்கத்தின் முடிவுகளை ஏற்காத அமைச்சர்கள் அமைச்சரவையில் முள்ளாக இருந்து உறுத்திக் கொண்டிருக்காமல் பதவி விலகுமாறு வலியுறுத்துகிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.