பெர்சே தலைமையில் என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை எப்போது அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்பதைத் தெளிவாக உரைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
பெர்சேயுடன் அங்காத்தான் பீலியா இஸ்லாம் மலேசியா(அபிம்), காபோங்கான் பெர்திண்டாக் மலேசியா(ஜிபிஎம்) ஆகியவற்றையும் உள்ளக்கிய அக்கூட்டணி, இன்று வெளியிட்ட ஒரு திறந்த மடலில் பிகேஆருக்குள் நடந்து கொண்டிருக்கும் உள்பூசலும் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சீர்குலைந்திருப்பதும் கவலை அளிப்பதாகக் கூறிற்று.
கூட்டணியின் பேச்சாளரான பெர்சே தலைவர் தாமஸ் பான், டாக்டர் மகாதிர் அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதற்கு ஒரு தேதியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றார்.
இப்போது தொடங்கி 2021 மே 9-க்குள் ஒரு தேதியைக் குறிப்பிட வேண்டும். அது பல்வகை வதந்திகள் பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என்றாரவர்.
“பிரதமர் பதவியை ஒப்படைக்கும் வாக்குறுதியில் எப்போது என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அமைத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அது நடக்கும் என்று மகாதிர் பல நேரங்களில் கூறியுள்ளார்.
“இந்தப் பதவி ஒப்படைப்புச் சுமூகமாக நடைபெறுவதற்கு வசதியாக அத்தேதிக்கு ஆறு மாதங்கள் முன்னதாகவே அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்”, என்றாரவர்.