காட் எழுத்து வடிவ அறிமுகத் திட்டத்துக்குத் தமிழ், சீனக் கல்வி அமைப்புகள் “ஒருமித்த ஆதரவு” கொடுத்ததாகக் கல்வி துணை அமைச்சர் தியோ நை சிங் கூறிக் கொண்டிருந்தாலும் அந்த அமைப்புகள் தொடக்கநிலைப் பள்ளிகளில் அத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றன.
தியோ நேற்று அந்த அமைப்புகளைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவை அடுத்த ஆண்டு தொடங்கி காட் எழுத்து வடிவம் அறிமுகம் செய்யப்படுவதை ஏற்றுக்கொண்டார்களாம் ஆனால், மாணவர்கள் ஜாவி எழுத்துகளைக் கற்க வேண்டும் என்றால் அதை எதிர்ப்பதாகவும் சொன்னார்களாம். அப்படித்தான் தியோ தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்திருந்தது.
அதை அந்த அமைப்புகள் மறுத்துள்ளன.
சீனக் கல்வி அமைப்பான டோங் ஜோங் அச்சந்திப்பில் நடந்ததை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
“சீன மற்றும் தமிழ் என்ஜிஓ-களான நாங்கள் துணை அமைச்சரிடம் எங்களின் நிலைப்பாட்டினை விளக்கினோம்.
“அச்சந்திப்பின்போது தேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி எழுத்துமுறை கற்பிக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதைத் தெளிவுபடுத்தினோம்
“ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்து ஐந்தாம் ஆண்டு பகாசா மலேசியா பாட நூலில் அடிப்படை ஜாவி எழுத்துகளை அறிமுகப்படுத்தும் பகுதி இடம்பெற்றுள்ளது. அது மாணவர்கள் அவ்வெழுத்துகளை(வீட்டுப்பாடமாகவோ தேர்வுப் பாடமாகவோ)க் கற்க வேண்டும் என்று கூறவில்லை. அது ஏற்கத்தக்கதே.
“ஆனால், ஜாவி எழுத்து வடிவத்தைக் கற்பிக்கும் திட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டினை மறுபடியும் வலியுறுத்தினோம். அத் திட்டத்தைக் கொண்டு வருமுன்னர் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். என்று கூறினோம்”, என அவ்வறிக்கை கூறிற்று.
நேற்று துணை அமைச்சருடனான அச்சந்திப்பில் டோங் ஜோங், ஜியாவ் ஜோங் மற்றும் தமிழ் அற வாரியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.