பாக்காத்தானை விமர்சிக்க வேண்டும். ஆனால், ஆக்கப் பொறுத்த நாம், ஆறப்பொறுக்க வேண்டாமா? –  இராகவன் கருப்பையா

‘அடுத்த பொதுத்தேர்தல் வரட்டும், பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியதுதான்.’ இதுபோன்ற கூக்குரல்கள் அண்மைய காலமாக சற்று அதிகமாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.

புதிய அரசாங்கம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, என்ற ஆதங்கம் ஆதரவாளர்களிடையே வலுத்துவருவது உண்மைதான்.

ஆனால் ‘ஆக்கப்பொறுத்தது ஆறப்பொறுக்க வேண்டாமா’ என்பதற்கு ஏற்ப இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக இருப்பதில் தவறில்லையே! இப்பதானே 15 மாதங்கள் கடந்துள்ளன! புதிதாகப் பிறந்த குழந்தை கூட  நன்றாக எழுந்து நடக்க 2 ஆண்டுகள் ஆகுமே!

ஓராண்டுக்குள் நிறைவேற்றிவிடுவதாக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பக்காத்தான் நிறைவேற்ற இயலவில்லை என்ற போதிலும், இந்த குறுகிய காலத்தில் நாட்டில் நாம் அடைந்துள்ள நன்மைகளை சற்று பின்நோக்கி பார்க்கத்தான் வேண்டும்.

அவற்றுள் முதன்மையானது பேச்சுரிமை. மக்கள் சுதந்திரமாக தங்களுடைய கருத்துக்களை வெளியிடுவதில் இப்போதெல்லாம் எவ்வித கட்டுப்பாடும் இல்லை – ஏறக்குறைய மேற்கத்திய நாடுகளைப் போல!

பிரதமர் துன் மகாதீருக்கு எதிராகக்கூட எதிர் கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் இருந்தும் அம்பைப்போல் அன்றாடம் பாய்கின்றன வசைப்பாடுகள். அவற்றையெல்லாம் புன்முறுவளோடு ஏற்றுக்கொண்டு தமது பணியில் கவனம் செலுத்துகிறார் பிரதமர்.

நஜிப் ஆட்சியில் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத நிலை இது. தமக்கு பிடிக்காத  ஒரு கேள்வியை கேட்டதற்காக வெளிநாட்டு பத்திரிகையாளர்களையே சிறையில் அடைத்தவர் அவர்.

1MDB ஊழலை கண்டுபிடித்து முதலில் அம்பலப்படுத்திய ‘சரவாக் ரிப்போட்’ எனும் அனைத்துலக இணையத்தல ஊடகத்தின் ஆசிரியர் ரூகாசல் ப்ரௌனுக்கு கைது ஆணை பிரப்பித்தார்.

அந்த மேகா ஊழல் தொடர்பான செய்திகளை பிரசுரம் செய்வதற்கு உள்நாட்டு ஊடகங்கள் கூட பயந்து நடுங்கிய ஒரு காலக்கட்டத்தை நாம் இன்னும் மறக்கவில்லை.

பொது மக்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அவையில் இதுபற்றி கேள்வி எழுப்ப இயலாமல் தடுமாறிய நிலை இருந்தது.

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்பாண்டியும் முன்னாள் போலீஸ் படைத்தலைவர் காலிட்டும் அவருக்கு இரு கரங்களைப் போல – இஷ்டம் போல் ஆட்டிப்படைத்தனர் நாட்டு மக்களை. கிட்டதட்ட ஒரு கொடுங்கோல் ஆட்சியைப்போலான உணர்வில், பயத்தில் நாள்களைக் கடத்தினோம் நாம். அந்த நிலை இப்போது இல்லை.

ஜமால் என்ற ஒரு அம்னோ குட்டித்தலைவர் அரங்கேற்றிய அட்டகாசங்களை நாம் மறந்திருக்க முடியாது. சிவப்பு சட்டைகள் அணிந்து, தமது கும்பலுடன் அவர் பரிந்த சேட்டைகளினால் பல தருணங்களில், என்னேரத்திலும் நாட்டில் கலவரங்கள் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இவையெல்லாம் அம்னோவின் ஆதரவில் நடந்தேறியதால் அவரை கைது செய்ய வேண்டிய சட்டம் கண்களை மூடிக்கொண்டது.

இதில் வேடிக்கையான, வெட்கக்கேடான நிலை என்னவென்றால் அந்த அராஜகக் கும்பலுக்கு  இனாமாக சிவப்பு சட்டைகளை வழங்கி ஊக்கமும் உட்சாகமும் கொடுத்தது முன்னாள் கல்வித் துணையமைச்சர் கமலநாதன்.

இதுமட்டுமின்றி இன்னும் பல அக்கிரமங்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் பக்காத்தான் ஒரு முற்றுப்பள்ளி வைத்ததை நாம் பாராட்டவேண்டாமா!

எனவே சற்று பொறுமை காக்காமல் பக்காத்தானுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை உமிழ்ந்து 15ஆவது பொதுத்தேர்தலில் இந்த நல்லாட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று கோஷமிட்டு பிரச்சாரம் செய்தால் என்ன நடக்கும்?

பாரிசான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும், ஜமால் கும்பலுக்கு மறுபிறவி, நஜிப்பிற்கு எதிரான வழக்குகள் திசைமாறக்கூடும் (நஜிப் மீண்டும் பிரதமரானாலும் ஆச்சரியமில்லை), அம்னோ-பாஸ் கட்சிகளின் இனத்துவேசம் தீவிரமடையும். நாட்டு மக்களின் பணத்தை சூரையாடிய மற்றத் திருடர்களும் விழா எடுப்பார்கள்.

‘பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்’ என்பதற்கு ஏற்ப ம.இ.கா.வும் தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கும். பிறகு மலேசியாவுக்கு விமோசனமே இல்லாமல் போய்விடும் – நிரந்தரமாக.

உலக அரசியல் வரலாற்றில் தனித்த பெரும்பான்மையில் ஆட்சி நடத்தும் நாடுகளைவிட கூட்டணி அரசாங்கங்கள் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் சற்று அதிகமாகவே சிரமப்படுகின்றன – உட்பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் அதற்கு முக்கிய காரணங்கள். பக்காத்தானுக்கும் அதே நிலைமைதான். அதோடு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஊழல் விகிதமும் சூழலை மேலும் மோசமாக்கிவிட்டன.

இதற்கிடையே ‘ஐசெட் மற்றும் ‘ரோம் சாசனம்’ முதலிய விஷயங்களை திரித்து, இனவாதத்தை தீவிரப்படுத்தி, நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கின்றன எதிர்கட்சிகள். கறைபடிந்து, கலங்கப்பட்டுள்ள தனது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள மக்களோடு ஒன்றனக்கலந்து ‘செல்ஃபி’ மண்ணனாகி விட்டார் நஜிப்.  இதுவும் ஒரு யுக்திதான்.

ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் அவ்வப்போது ‘வட்ஸப்’ புலனத்தில் தனது குரலை பதிவேற்றம் செய்து ‘இலவு காத்த கிளி’ போல காத்துக்கிடக்கிறார். சமுதாயத்திற்காக பேச வேண்டிய வேளைகளில் எல்லாம் ‘மௌன சாமியாராக’ அம்னோவுக்கு  அடிமையாகிக் கிடந்த முன்னாள் ம.இ.கா. தலைவர் சுப்பிரமணியமும் கூட அண்மையில் திடீரென வீரம் வந்து மக்கள் நலன் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.

இதற்கெல்லாம் இடம் கொடுத்து பக்காத்தானை வெறுத்தால் கடைசியில் பாதிக்கப்படுவது நாம்தான். பாரிசானைக் கவிழ்க்க நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

‘பால் பொங்கும் நேரத்தில் தாழி உடைந்த’ கதையாகிவிடக்கூடாது!