சிலாங்கூர் அரசிலிருந்து டிஏபியை நீக்குவீர்- பாஸ் இளைஞர் தலைவர் கோரிக்கை

பாஸ் இளைஞர் துணைத் தலைவர் அஹமட் ஃபாட்லி ஷாரி, சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து டிஏபி-யை வெளியேற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

“மந்திரி புசார் ஆட்சிக்குழுவில் மாற்றங்களைச் செய்ய சிலாங்கூர் சுல்தானின் அனுமதியைப் பெற்று டிஏபி கட்சியினரை வெளியேற்ற வேண்டும், அத்துடன் அதே கட்சியைச் சேர்ந்த சிலாங்கூர் சட்டமன்றத் தலைவரையும் தூக்க வேண்டும்”,என்று ஃபாட்லி ஓர் அறிக்கையில் கூறினார்.

சட்டமன்றத்தில் பாஸுக்கும் அம்னோவுக்கும் குறைவான இடங்களே இருந்தாலும் அவை அதற்கு ஆதரவாக இருக்கும் என்றாரவர்.

நேற்று மலேசியாகினியில் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கடந்த மாதம் சட்டமன்றத்தில் ஒருதலைப்பட்ச மதமாற்றத்துக்கு இடமளிக்கும் சட்டவரைவு ஒன்றைத் தாக்கல் செய்ய முயன்ற செய்தி வந்ததை அடுத்து அஹமட் ஃபாட்லி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்தச் சட்டவரைவுக்கு, பக்கத்தான் உறுப்பினர்கள்- பிகேஆர், அமனா சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட- எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அமிருடின் அதைக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார் என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

அந்த நிலையில், சிலாங்கூர் சட்டமன்றத் தலைவர் இங் சுவி லிம், மந்திரி புசார் சட்டவரைவைத் தாக்கல் செய்ய முடியாதபடிக்குச் சட்டமன்ற அமர்வை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் , இங் இதை மறுக்கிறார். அரசாங்க வேலைகள் முடிந்ததால் நடைமுறை விதிகளின்படிதான் சட்டமன்றக் கூட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்..

அதனால் ஆத்திரமுற்ற மந்திரி புசார் ஆதரவாளர்கள் அவைத் தலைவரை அகற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது இப்படி என்றால் இன்னோரு பக்கம் மந்திரி புசாரையே பதவி இறக்கவும் முயற்சிகள நடக்கின்றனவாம்.