‘லைனஸ்’-ஐ விரட்ட முடியாது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள்’

நிபுணர்களின் ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒருசில தரப்பினரின் செயலுக்காக, மலேசியாவில் முதலீடு செய்ய அழைத்த பிறகு, ‘லைனஸ்’ அரியமண் சுரங்கத் தொழில் நிறுவனத்தை ‘விரட்ட’ முடியாது எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

மலேசியாவில், அதன் செயல்பாடுகளுக்காக லைனஸ் RM1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாக கூறிய அவர், ஆனால் அந்த அரிய மண் சுரங்கச் செயல்முறையில் மட்டும் கதிரியக்க எச்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது என்றார்.

அந்தக் கதிரியக்கக் கழிவுகள் ‘மிகவும் குறைந்த மட்டத்தில்’ இருப்பதாகவும், அதனால் ஆரோக்கியத்திற்கு எவ்வகை தீங்கும் விளையப்போவதில்லை என்றும் நிபுணர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அந்தச் சிறிய அளவிலான கதிரியக்கக் கழிவுகளை’ இன்னும் குறைப்பதற்கான வழிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“நாம்தான் அழைந்தோம் (முதலீடு செய்ய வந்தார்கள்) பின்னர், நாமே அவர்களை வெளியேற சொல்கிறோம். நாம் ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு பிரச்சனை வந்தவுடன், அவர்களை விரட்டுகிறோம் என்று மற்றவர்கள் பேசுவார்கள்….. அப்படியெல்லாம் முடியாது,” என்று வியாழக்கிழமை, தனது இரண்டு நாள் வேலை நிமித்த பயணத்தை ஃபுகுஒகாவில் முடித்தபின்னர், அவர் மலேசிய ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

லைனாஸுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாகக் கவனித்து வருவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

“இந்த லைனாஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் விரட்டினால், மற்ற (வெளிநாட்டு) முதலீட்டாளர்கள் (மலேசியா) வரமாட்டார்கள். நமக்குப் பிடிக்காத ஒன்று இருப்பதால், அவர்களை (முதலீட்டாளர்களை) வெளியேறச் சொல்கிறோம். பிரகு, யார் (முதலீட்டாளர்கள்) வர விரும்புவார்கள், அவர்களுக்கு ஓர் உறுதிபாடு தேவை” என்று அவர் கூறினார்.

கதிரியக்கக் கழிவுகள் அபாயகரமானதாக இருந்தால், மலேசியாவில் உள்ள சுமார் 600 லைனாஸ் உள்ளூர் பொறியியலாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

“நிபுணர்கள் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்கள், ஆனால் சிலர் நிபுணர்களின் முடிவை ஏற்கவில்லை. பிறகு எதற்காக நாம் நிபுணர்களிடம் ஆராய்ச்சி செய்யச் சொல்ல வேண்டும், இது ஒரு பிரச்சினை.

முதலீடுகளை இழப்பது மட்டுமல்ல, லைனஸ் மூடப்பட்டால் 600 உள்ளூர் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.

“நம் மக்களில் அறுநூறு தொழிலாளர்கள் அங்கு வேலை செய்கின்றனர், அவர்கள் பயப்படவில்லை, அவர்கள் லைனஸ் செயல்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

-பெர்னாமா