‘அடிப் குடிம்பத்தினருக்கு ஏஜி மன்னிப்பு கேட்டால் போதும், சிறை செல்ல வேண்டியதில்லை’

முன்னாள் தீயணைப்பு வீரர், முஹமட் அடிப் முஹமட் காசிமின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்கான விசாரணையில், அரசு சட்டத்துறை தலைவர் (ஏஜி) தோமி தோமஸ் மன்னிப்பு கேட்டால் போதும் என்று அவர்தம் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

தோமஸ்-ஐ சிறையில் தள்ளுவது அவர்களது நோக்கம் அல்ல என்று அடிப் குடும்பத்தினரின் வழக்குரைஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறியுள்ளார்.

இன்று இதனை, ஷா ஆலாம் குரோனர் நீதிமன்றம் தெரிவித்தது.

“ஒருவேளை, அடிப் குடும்பத்தினரின் இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் அவமதிப்பாகக் கருதினால், அதற்கு மாறாக ஏஜி-ஐ சிறையில் அடைக்க வேண்டுமென்று கேட்கும் நோக்கமும் அவர்களுக்கு இல்லை என நாங்கள் நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கிவிட்டோம்.

“முக்கியம் என்னவென்றால், அவர் அவமதித்தார் என்று நாங்கள் நம்புவது போன்று நீதிமன்றமும் கண்டறிந்தால், அட்டர்னி ஜெனரல் என்ற வகையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.

“நீதிமன்றத்திடமும் அடிப் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும்,” எனச் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

இந்த வழக்கு விசாரணையை செவிமடுக்க, ஆகஸ்ட் 21-ம் தேதியை குரோனர் ரோஃபியா முகமட் நிர்ணயித்திருக்கிறார்.

மூத்தக் கூட்டரசு ஆலோசகர் எஸ் நற்குணவதி தோமஸைப் பிரதிநிக்கிறார்.

ஏஜி தனது வாக்குமூலத்தில், தாக்குதலால் ஏற்பட்ட காயங்களால் அடிப் இறக்கவில்லை என்று தெரிவித்ததை அடுத்து இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

முன்னதாக, ஹனிஃப் தனது விண்ணப்பத்தின் மூலம் இரண்டு சிக்கல்களை எழுப்பியிருந்தார்.

முதலில், முதற்கட்ட விசாரணையில் தோமஸ் தனது ஆட்சேபணையைத் தெரிவிக்க முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமென்றால், அது எந்த நிலைவரை என்று ஹனிஃப் கேள்வி எழுப்பினார்.

இரண்டாவதாக, ஏஜியின் வாக்குமூலத்தை விசாரணையின் போது பயன்படுத்த முடியுமா என்பதையும் அவர் கேட்டிருந்தார்.

“வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதுதொடர்பான நிலைப்பாட்டை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

“நீங்கள் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு, நீதிமன்றத்தை முடிவு செய்யச் சொல்ல முடியாது,” என்று அவர் விளக்கினார்.